Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா திட்ட விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ஞானசேகரன் வரவேற்றார். மையத்தை சேலம் ஆட்சியர் ராமன் திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் சேலம், விழுப்புரம், திருவள்ளூர், திருநெல்வேலி, விருதுநகர், உதகமண்டலம் ஆகிய 6 இடங்களில் மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையம் தொடங்க மத்திய அரசு ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதில், முதல் தவணையாக ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் வழங்கியுள்ளது.
இம்மையத்தில் இணையதள வசதியுடன் கூடிய 20 கணினிகள் கொண்ட, நவீன தகவல் தொழிற்நுட்ப ஆய்வுக் கூடம் வேலை நாடுநர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப் பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான, மாணவர்களின் அனைத்து கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் மையத்தில் தீர்க்கப்படும்.
தனியார் துறையில் வேலை நாடுநர் வேலை வாய்ப்பு பெறுவதற்கும், வேலையளிப்பவர் கள் தங்களுடைய நிறுவனங்க ளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளமும், திறன் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பம் செய்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் www.tnvelaivaaippu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் புதிய பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பணிவாய்ப்பை பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் www.ncs.gov.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
நிறைவில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா நன்றி கூறினார்.சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை ஆட்சியர் ராமன் திறந்து வைத்தார். உடன் வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குநர் லதா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ஞானசேகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா. படம்: எஸ்.குரு பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT