Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக நிபுணர்கள் மூலம் மீனவக் கிராமங்களில் விளக்கம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
தூத்துக்குடிக்கு முதல்வர் வரும்போது மீனவக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவுகள், மீனவர்களின் விசைப்படகுகளுக்கு தேவையான விலையில்லா இயந்திரம், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிக்க உள்ளார். ராக்கெட் ஏவுதளம் அமைப்பதால் மீனவ மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில், அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வைத்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
இதுதவிர, ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள மீனவக் கிராமங்களில் இருந்தும் மீனவர்களை அழைத்து வந்து அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது குறித்து விரிவாக நமது பகுதி மீனவர்களுக்கு விளக்கப்படும். மீனவ மக்கள் இதுதொடர்பாக எந்தவித அச்சமும் கொள்ளத் தேவை இல்லை.
உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின்நிலையப் பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டன.
அந்தப் பகுதியில் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதாரங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் சேதாரம் ஏற்பட்டாலும் உடனடியாக முழு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற வளர்ச்சித் திட்டங் களால் அப்பகுதி மீனவ மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். சுற்றியுள்ள பகுதிகளும் வளர்ச்சி அடையும்.
மேலும் மீனவக் கிராமங் களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில்,எஸ்பி ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் தனப்ரியா, வட்டாட்சியர் முருகேசன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் புஷ்ரோ ஷப்ணம் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின்நிலையப் பணிகள் 50% முடிந்து விட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT