Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலத்தில் ரூ.5.80 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா

சேலம்

சேலத்தில் ரூ.5.80 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சம் மதிப்பில் 81 எண்ணிக்கையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ரூ.5.80 கோடி மதிப்பில் சூரமங்கலம் மண்டலத்

துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறிவியல் பூங்கா கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.

மனித உடல்களில் ஏற்படக் கூடிய நோய்கள் மற்றும் அவை பரவும் விதம் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகை பூங்காவில் வைக்கவும், மாணவ. மாணவிகளின் விண்வெளி ஆய்வுத் திறனை வளர்க்கும் வகையில் விண்வெளி ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 பேர் அமரும் கோளரங்கம் மற்றும் சூரிய சக்தி மூலம் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியர்களின் வகைகள், மணிக் கூண்டின் செயல்பாடுகள், கியர் ரயில்கள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் செயல்முறை விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரங்கில் அறிவியல் கண்டுபிடிப்பு மையமும், டைனோசர் போன்ற அரிய விலங்குகள் தொடர்பான தகவல்களுடன் கூடிய மாதிரி உருவங்கள் பூங்காவில் அமைக்கப்படவுள்ளன. ஆய்வின் போது, உதவிப் பொறியாளர்கள் அன்புச்செல்வி, எம்.பாலசுப்ரமணியம் மற்றும் சுகாதார ஆய்வாளர் எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x