Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் வேலூர் கோட்டையில் நடைபயிற்சிக்கு அனுமதி காவல் நிலையத்தில் அனுமதி சீட்டு பெறுவது கட்டாயம்

வேலூர்

வேலூர் கோட்டையில் உரிய அனுமதி சீட்டு பெற்று நடைபயிற்சி மேற்கொள்ள வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது முடக்கம் அறிவிப்பால் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டை முழுவதும் மூடப்பட்டது. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மட்டும் வழக்கமான பூஜைகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கிடையில் ஊரடங்கு தளர்வால் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம், பூங்கா மற்றும் மதில் சுவர் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை தொடர்ந்தது. அதேபோல், வேலூர் கோட்டையினுள் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கும் கோட்டையில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

கோட்டையில் நடைபயிற்சிக்கு சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காவல் துறையினர் தடுத்து வந்ததால் 50-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்ததுடன் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை முதல்வர் பழனிசாமி சமீபத்தில் வெளியிட்டார். அதில், பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 10-ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தார். அதன்படி, வேலூர் கோட்டையின் உள்ளே காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற் கொள்ள அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கோட்டையில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கோரி ஏற்கெனவே வரப்பெற்ற கோரிக்கை மனுக்களுடன் தொல்லியல் துறையினரின் அறி வுரைகளின்படியும் நடைபயிற்சி மேற்கொள்ள வரும் 10-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப் படுகிறது.

நடைபயிற்சி மேற்கொள் பவர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் மனு அளிப்பதுடன் தொல்லியல் துறையினரிடம் உரிய அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். கோட்டையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

நடைபயிற்சி மேற்கொள்ப வர்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள், இசை அமைப்பு சாதனங்கள், உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை’’ என்று தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x