Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்த நிலையில், பொதுப்பணித் துறையின் சேலம் சரபங்கா வடிநிலக் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 168 ஏரிகளில் 23 ஏரிகள் மட்டும் முழுமையாக நிரம்பியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போது, வட கிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனிடையே, தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த நிலையில், சேலம் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநிலக் கோட்டத்தின் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் பெரும்பாலானவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இவ்விரு மாவட்டங்களிலும் 23 ஏரிகள் மட்டும் முழுமையாக நிரம்பியுள்ளன.
இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிய தாவது:
சேலம் மாவட்டத்தில் மூக்கனேரி, இனாம் பைரோஜி ஏரி, கன்னங்குறிச்சி ஏரி, ஆத்தூர் புது ஏரி உள்ளிட்ட 89 ஏரிகள் உள்ளன. இதில், தென்மேற்குப் பருவமழை மூலம் காமலாபுரம் பெரிய மற்றும் சிறிய ஏரி, கன்னங்குறிச்சி ஏரி, ஆத்தூர் புது ஏரி, நெய்காரப்பட்டி ஏரி, அம்மம்பாளையம் முட்டல் ஏரி, அக்ரஹார பூலாவரி ஏரி, ஜங்கமசமுத்திரம் ஏரி, பூலா ஏரி, இனாம்பைரோஜி ஏரி, மூக்கனேரி ஆகிய 11 ஏரிகள் மட்டும் முழுமையாக நிரம்பியுள்ளன. 2 ஏரிகள் 99 சதவீதமும், ஒரு ஏரி 80 சதவீதமும், 4 ஏரிகள் 70 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும், 27 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 109 ஏரிகள் நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் மின்னக்கல் ஏரி, சேமூர் பெரிய ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, பாலமேடு ஏரி உள்ளிட்ட 70 ஏரிகள் உள்ளன. இவற்றில் மின்னக்கல் ஏரி, சேமூர் பெரிய ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, பாலமேடு சின்ன ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, இளுப்புளி ஏரி, செருக்கலை ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, இடும்பன்குளம் ஏரி, வேட்டம்பாடி ஏரி ஆகிய 12 ஏரிகள் முழுமையான நிரம்பியுள்ளன.
2 ஏரிகள் 99 சதவீதமும், 3 ஏரிகள் 70 சதவீதமும், ஒரு ஏரி 50 சதவீதமும், 12 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 49 ஏரிகள் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளன. வட கிழக்குப் பருவமழை மூலம் மீதமுள்ள ஏரிகளும் நிரம்பும் என விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT