Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் : விடிய, விடிய வீதியில் காத்திருந்த மக்கள்

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு பகுதியில் செல்வம் வீட்டில் ஏற்பட்ட விரிசலை அவரது மனைவி லதா சுட்டிக்காட்டினார்.படம்.வி.எம்.மணிநாதன்.

வேலூர் / திருப்பத்தூர்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை 4.17 மணிஅளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 59 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று அதிகாலை 2 மணி முதல் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 6 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இது அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவானது.

இந்த நில அதிர்வு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பெரியபேட்டை, சென்னாம்பேட்டை, தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட அரங்கல்துருகம் வனப்பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மீனூர் கொல்லைமேடு பகுதியில் நில நடுக்கத்தால் 4 வீடுகளில் விரிசல் ஏற்பட்டன.

மீனூர் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம்(57). இவர் மனைவி லதா (47), மகன்கள் விஜய்(28), நவீன்(25) ஆகியோருடன் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக்கொண்டி ருந்தார். 2 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தனது குடும்பத்தாருடன் வீட்டை விட்டு வெளி யேறினார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்தன. கட்டில், பீரோக்கள் சிறிது தூரம் நகர்ந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் சுவர், மேல்மாடி சுவர், அறைகளில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

அதேபகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், நாகேந்திரன், ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அச்சமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி விடிய, விடிய வீதியில் தஞ்சமடைந்தனர் . நில நடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 59 கி.மீ., தொலைவில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x