Published : 18 Nov 2021 03:06 AM
Last Updated : 18 Nov 2021 03:06 AM

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு - வெள்ள நிவாரணத்துக்காக ரூ.2,629 கோடி வழங்க கோரிக்கை : மத்திய குழுவை விரைவில் அனுப்புவதாக அமைச்சர் உறுதி

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்பி. டி.ஆர்.பாலு சந்தித்து தமிழகத்துக்கான நிவாரண நிதி கோரி மனு அளித்தார்.

சென்னை

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கான நிவாரணம், தற்காலிக சீரமைப்பு, நிரந்தர கட்டமைப்புக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து உடனடியாக மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்வதாக அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது. டெல்டா மாவட்டத்தில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், டெல்டா மாவட்டங்களில் வெள்ளநீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்க ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழுவை அமைத்தார். அக்குழு தொடர் ஆய்வு மேற்கொண்டு நேற்று முன்தினம் முதல்வரிடம் அறிக்கையை அளித்தது. இதையடுத்து, சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம், சம்பா பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 6, 038 மதிப்பிலான இடுபொருட்கள், சாலை, வடிகால் கட்டமைப்பகளை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மழை பாதிப்புகள் குறித்த கணக்கீட்டுடன் மத்திய அரசுக்கு அளிக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று வழங்கினார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:

தமிழகத்தில் மழையால் 12 மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 50 ஆயிரம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

வெள்ள சேதத்தை கணக்கிட்ட அமைச்சர்கள் குழு, தன்னிடம் அளித்த அறிக்கையை கோரிக்கை மனுவாக தயாரித்து, மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங் கும்படி முதல்வர் தெரிவித்தார். அதன்படி, உள்துறை அமைச்சரிடம் மனுவை வழங்கினேன். நிலை மையை தான் கவனித்துக் கொண் டிருப்பதாகவும், உடனடியாக 6 பேர் கொண்ட குழுவை அனுப்பி, நேரடியாக பார்வையிட்டு வந்தபின் பாதிப்புகளின் அளவை கணக்கிட்டு நிதி முடிவு செய்வதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியிலும் பேசினார்.

உடனடி நிவாரணமாக ரூ.550 கோடியை முதல்வர் கேட்டுள்ளார். நிரந்தர கட்டமைப்பு நிவாரணமாக ரூ.2,079 கோடி என மொத்தம் ரூ.2,629 கோடியை வழங்கும்படி கேட்டுள்ளார். மத்திய அரசின் குழுவை இன்று மாலையே அனுப்புவதாக தெரிவித்துள்ளார். விரைவில் அவர்கள் தமிழகம் வந்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x