Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் பெய்த கனமழையால் - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆய்வுக்குப் பின் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

திருவாரூர்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆய்வுக்குப் பின் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மழை, வெள்ளச் சேதங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர்,மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முனைப்பாக செயல்பட்டதால் பெரிய சேதங்கள் ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் பயிர்கள்நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்துள்ளது.

வயல்களில் தேங்கியிருக்கும் நீரை வடிய வைக்க நீர்வள ஆதாரத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயிர்களை காப்பாற்ற முடியாத இடங்களில் விவசாயிகள் மறு நடவு செய்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும். தற்போது பாதிக்கப்பட்ட பயிர் சேதம் குறித்து கிராம வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்த பின் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிப்பு குறைவு

கடந்த 6 மாத திமுக ஆட்சியில் ரூ.65 கோடியில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றதால், தற்போது மழைநீர் வடிவதற்கு பேருதவியாக உள்ளது. மழை பாதிப்புஅதிகளவில் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் 2,838 பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, 44 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மைகாரணமாக தான் சென்னையில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த 4 மாத காலத்தில் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அன்றைய அதிமுக அரசு எவ்வித முன்னறிவிப்புமின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் 174 பேர் உயிரிழந்தனர். 1.20 லட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதற்கான நிரந்தர தீர்வைஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நம்பி அப்பாத்துரை, பேராசிரியர்கள் ஜானகிராமன், பிரவீன் குப்தா, டாக்டர் பிரதீப் மோசஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணிகளை முறையாக செய்யவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்தும் வழங்கப்பட வேண்டிய நிதி குறித்தும் பிரதமரிடம் பேசப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x