Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM
பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கடலூர் மக்களவைத் தொகுதியின் திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மக்களவை உறுப்பினர் நீங்கலாக 5 பேரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷூக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி இவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சிபிசிஐடி விசாரணை
மர்ம மரணம் என்று காடாம் புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். உயிரிழந்த கோவிந்த ராசுவின் மகன் செந்தில்வேல் தனது தந்தை கொலை செய்யப் பட்டதாகவும், இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன.இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீ ஸாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி, இன்ஸ்பெக்டர்கள் சுந்தர ராஜ், தீபா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து, கோவிந்த ராசுவின் உடல் பிரேத பரி சோதனை அறிக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு தரப்பட்டது. அதில், கோவிந்தராசு அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் பணியில் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அல்லாப்பிச்சை (53), பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (32), வடக்கு சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த கந்தவேல்(47), பண் ருட்டி வினோத் (32), எம்.பி.யின் உதவியாளராக இருக்கும் நட ராஜன்(35) ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீஸார் பிடித்து கடலூரில் உள்ள சிபிசிஐடி அலுவல கத்துக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது எம்பியின் உதவியாளர் நடராஜன் மயங்கி விழுந்தார். கடலூர் அரசு மருத்துவ மனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
விரைவில் கைதாகலாம்
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்காக மாற்றி, கடலூர் மக்களவை உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை அல்லாப்பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், கந்த வேல், வினோத், எம்.பி.யின் உதவியாளர் நடராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதில், மக்களவை உறுப்பினரின் உதவி யாளர் நடராஜன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மீதி 4 பேரும் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மக்க ளவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷை கைது செய்ய மக்களவையின் செயலரிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படு வதற்கான வாய்ப்புகள் உள்ள தாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்.பி.யை கைது செய்ய வேண்டும்
ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: கடலூர் முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை வழக்கில் மக்களவை உறுப்பினரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தக் கொலை வழக்கில் சிபிசிஐடி பிரிவின் விசாரணை இதுவரை சந்தேகத்துக்கு இடமின்றி சென்று கொண்டிருக்கிறது. மேலும், கொலை தொடர்பாக கடந்த மாதம் 20-ம் தேதி கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்களில் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இத்தகைய சூழலில் கொலை வழக்கின் முதன்மை எதிரியான ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி தயங்குவது ஏன் என்று தெரியவில்லை. முதன்மை எதிரியைக் கைது செய்யாமல் அவரது உதவியாளர்களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை. மேலும், கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் ரமேஷ், இனியும் கைது செய்யப்படாமல் இருந்தால் வழக்கின் சாட்சியங்களை அழித்து விடுவார்.
எனவே, கடலூர் மக்களவை உறுப்பினரை சிபிசிஐடி போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT