Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

கரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து கடையநல்லூர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வரின் பிரச்சாரத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம். (உள்படம்) வேனில் இருந்தபடி கூட்டத்தில் உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி.

தென்காசி

கரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தென்மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடர்ந்தார். கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பெட்டி வைத்து மனு வாங்குகிறார். பெட்டியைப் பூட்டி, வீட்டுக்கு எடுத்துச் சென்று, 3 மாதம் கழித்துஆட்சிக்கு வந்தவுடன் சீலை உடைத்துதிறப்பதாகவும், 3 மாதத்தில் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவதாகவும் கூறுகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது இதேபோல் ஊர்ஊராகச் சென்று வாங்கிய மனுக்கள் என்னவாகின? நீங்கள் எவ்வளவுவேடம் போட்டு, எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும் நாட்டு மக்களிடம் எடுபடாது.

தமிழக ஆளுநரை சந்தித்து என் மீதும், அமைச்சர்கள் மீதும் ஸ்டாலின் புகார் மனு கொடுத்தார். சாலைக்கு டெண்டரே விடவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை. அதில் எப்படி ஊழல் செய்ய முடியும்? பொய்த் தோற்றத்தை உருவாக்கி, மக்களிடம் இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஸ்டாலின். திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அதனால் திமுகவினர் கோரப்பசியில் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் ஆளையே விழுங்கிவிடுவார்கள்.

இனிவரும் காலத்தில் ஒரு சாதாரண மனிதன்தான் தமிழகத்தில் முதல்வராக வரவேண்டும். என்னைப்போல ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும். கஷ்டமே தெரியாதவர்கள் முதல்வராக வந்தால், எப்படி மக்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, திட்டங்களை தீட்ட முடியும்?

‘அதிமுகவினருக்காக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என்று ஸ்டாலின் பொய் கூறுகிறார். கடன் தள்ளுபடியால் திமுகவினர்தான் அதிகமாக பயன்பெற்றுள்ளனர். இதற்கு ஓர் உதாரணம் திமுக முன்னாள் எம்பி அக்னிராஜ். இவரது குடும்பத்தினருக்கு மட்டும் சுமார் ரூ.7 லட்சம் கடன் தள்ளுபடியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிகமாக கடன் பெற்றவர்கள் திமுகவினர். பயனடைந்த அத்தனை பேரும் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பொதுமக்களுக்கும் பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் என இது தொடர்பாக தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில், வன்முறையில் ஈடுபட்டது உட்பட சில குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடாக இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவான வழக்குகள் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்கள் நலன் கருதி கைவிடப்படுகின்றன. இந்த வழக்குகள் திரும்ப பெறப்படும்.

குடியுரிமை போராட்ட வழக்குகள்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு என பல்வேறு போராட்டங்களில் சில அமைப்புகள் ஈடுபட்டன. இப்போராட்டங்களின்போது காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து சட்டம், ஒழுங்கை பராமரித்தனர்.

போராட்டங்களின்போது தடையைமீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற குற்றங்களுக்காக சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை தவிர, போராட்டங்களில் பங்கேற்றதாக ஆயிரக்கணக்கானோர் மீது பதிவான மற்ற வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

அதேபோல, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. சில வழக்குகள் முதல் தகவல் அறிக்கை நிலையில் உள்ளன. இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை கனிவோடு பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக அடுத்தடுத்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தன.அவற்றுக்கு வழிவிடுமாறு கேட்டுக்கொண்ட முதல்வர், ஆம்புலன்ஸ்கள் கடந்து சென்ற பிறகு பேச்சை தொடர்ந்தார்.

இதையடுத்து, சங்கரன் கோவிலில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடு வழங்குவதற்காக அரசு சார்பில் சொந்த நிலம் வாங்கி, கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வந்தனர். அந்த கோரிக்கையை மத்திய அரசும், அதிமுக அரசும் நிறைவேற்றி உள்ளன.

தமிழகத்தில் இருப்பது மக்களுடைய அரசு. மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு. அதிமுக அரசின்திட்டங்களை மக்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். எதிரிகள் நாள்தோறும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதை முறியடிக்க வேண்டும். இந்த அரசு தொடர்ந்திட அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு தூத்துக்குடி சென்ற முதல்வர், அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x