Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ளதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இடைவிடாத போராட்டம்
மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கடந்த ஓராண்டாக போராடியவிவசாயிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்தியா முழுக்க நடந்து வந்த இடைவிடாத போராட்டமே மத்திய அரசு மனமாற்றமாகி இறங்கி வர வைத்தது.வேளாண் சட்டங்களை தொடக்க நிலையிலேயே திமுக எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும்தாக்கல் செய்தோம். மக்கள் மன்றத்திலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். திமுக சார்பில்மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. சட்டப்பேரவையிலும் குரல் கொடுத்தோம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்போடச் சொன்னோம். ஆனால் அன்றைய அதிமுக ஆட்சி அதைச் செய்யவில்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக பிரச்சாரம் செய்தது. வேளாண் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களை வாதத்துக்கு அழைத்தார் அன்றைய முதல்வர் பழனிசாமி. பாஜகவைவிட அதிகமாக அவர்தான் ஆதரித்தார்.
விவசாயிகள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலை. வேளாண் சட்டங்களில் அதுபற்றி எதுவும் இல்லை. விவசாயிகளை நிலங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம் என்று திமுக சார்பில் சொல்லி வந்தோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் 28-8-2021-ல்வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். கடந்த ஓராண்டுகாலமாக நாடாளுமன்றம், சட்டப்பேரவை, மக்கள் மன்றத்தில் நாங்கள் சொன்னதே சரியானது என்பதை இப்போதுபிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்போதாவது ஒப்புக்கொண்டதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமானது தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டு காலம் இடைவிடாது போராடி வரும் விவசாயிகளின் தியாகம்தான். கடந்த ஆண்டுநவ.26-ம் நாள் டெல்லிக்கு வந்து நேரடியான போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினார்கள். ஓராண்டு காலத்தை எட்டுவதற்கு இன்னும் சரியாக 7 நாட்களே உள்ளன. நவ.26-ம் நாள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உழவர்சங்கங்கள் தயாராகி வந்தன. வெயிலையும் மழையையும் நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடினார்கள். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆனாலும் தங்களது போராட்டக் குணத்தை விடவில்லை.
விவசாயிகள் போராட்டம் நவ.26-க்குப் பிறகு இன்னும் வேகம் எடுக்கும் என்பது தெரிந்தோ, அல்லது நடக்க இருக்கும் சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில் வைத்தோ இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இவ்வளவுப் போராட்டங்கள், தியாகங்களுக்குப் பிறகுதான் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உயிரிழந்தோருக்கு நிதியுதவி
காரணம் எதுவாக இருந்தாலும்,திரும்பப் பெறும் முடிவு வரவேற்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் முறையாக இம்மூன்று சட்டங்களும் திரும்பப் பெற, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய விவசாயிகளை அழைத்து மத்திய அரசுபேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி அளித்து, அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலமாக விவசாயிகளுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை இனியாவது மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும். குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பிற மக்கள் விரும்பாத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். வரும்நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT