Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 03:07 AM
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின்150-வது பிறந்ததின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வ.உ.சி.யின் பன்னூல் திரட்டு மற்றும் திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 14 வகையான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால், முதல்கட்டமாக வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள்மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, முதல் தொகுதி – வ.உ.சி. பன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும், 2-ம் தொகுதி – வ.உ.சி. திருக்குறள் உரை எனும் தலைப்பிலும் குறைந்த விலையில் தயாராகியுள்ளன.
வ.உ.சி.யின் உரை நூல்கள்
இரண்டாம் தொகுதி திருக்குறளுக்கு வ.உ.சி எழுதிய உரையாகும். வ.உ.சி.யின் தேசப்பணி, தியாகம்,தொழிற்சங்கத் தொண்டு ஆகியவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல வ.உ.சி.யின் இலக்கியப்பணி. தன் வாழ்வை திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட வ.உ.சி, திருக்குறளுக்கான மணக்குடவர் உரையைத் தேடிப் பதிப்பித்தார். மணக்குடவர் உரையை அடிப்படையாகக் கொண்டு வஉசி எழுதிய புதிய உரை இது.
வ.உ.சி எழுத்துகளை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளை சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீ.அரசு, பதிப்பாசிரியராக இருந்து இப்பெருந்திரட்டுகளை தொகுத்துள்ளார். புகழ்பெற்றஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த இரண்டு நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி,தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் மரியாதை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் மற்றும்அவரது 85-வது நினைவு தினத்தை‘தியாகத் திருநாளாக’ சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழக அரசின் சார்பில், சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT