Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM
தமிழகத்தில் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை ரூ.11.14 கோடியில் முதல்வர்ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தலைமைச் செயலகத்தில், ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்தபசுமைப் போர்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடுவளர்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ.11.14 கோடி மதிப்பில் 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதன் தொடக்கமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தரவருமானம் கிடைக்க வழிவகுப்பதுடன், மண்வளம் அதிகரித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பும்,சுற்றுச்சூழலும் மேம்படும். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மானாவாரி நிலத்தொகுப்புகளில் பயன்தரும் மரக்கன்றுகளை வளர்க்கும் முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கில், ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தை 2021-22-ம் ஆண்டில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தேக்கு, ஈட்டி,மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். நடப்பாண்டில், முதற்கட்டமாக 73 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இம்மரக்கன்றுகளை வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்தசெறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.
மேலும், நடவு செய்த 2-ம் ஆண்டுமுதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது,வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த் துறையின் அடங்கல்பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நிகழ்ச்சியில், வேளாண் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்துறை செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT