Published : 30 Mar 2023 07:13 AM
Last Updated : 30 Mar 2023 07:13 AM

சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் உதவி; பொதுமக்கள் இழந்த ரூ.235 கோடி மீட்பு - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

அமித் ஷா | கோப்புப்படம்

புதுடெல்லி: நாட்டில் சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ரூ.235 கோடியை உடனடியாக மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இணைய மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகாரளிக்க கட்டணமில்லா உதவி எண் ‘‘1930” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புகார்களை பதிவு செய்யும்போது அது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்வதற்கும், நடவடிக்கை மேற்கொள்வதற்கும் உதவியாக உள்ளது. இதுவரை 40,000 புகார்கள் எப்ஐஆர்-களாக மாற்றப்பட்டுள்ளன.

மேவத், ஜம்தாரா, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், விசாகப்பட்டினம் மற்றும் குவாஹாட்டி ஆகிய இடங்களில் அதிகமாகசைபர் மோசடிகள் நடைபெறுவதை யடுத்து அங்கு ஒருங்கிணைந்த சைபர் கிரைம் குழுக்கள் உருவாக் கப்பட்டுள்ளன.

சைபர் மோசடி மூலம் ஏமாற் றப்பட்ட ரூ.235 கோடி உடனடியாக மீட்கப்பட்டதால் 1.3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

சைபர் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுவான தாக மாற்றும் வகையில், அத்தகைய குற்றங்களுக்கு பலியாகிவிடாமல் எவ்வாறு தடுப்பது மற்றும் புகாரளிப்பது என்பது குறித்து உதவிடவே ‘‘1930” ஹெல்ப்லைன் உருவாக்கப் பட்டுள்ளது.

குற்றவியல் நீதி அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் பயனாக, நாட்டில் 99% காவல் நிலையங்கள் ஆன்லைனில் 100% எப்ஐஆர் பதிவு செய்வதுடன், 12.8 கோடி கோரிக்கைகளில் 12.3 கோடி கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

அதேபோன்று, தேசிய தானி யங்கி கைரேகை அடையாள அமைப்பிடம் (என்ஏஎஃப்ஐஎஸ்) இப்போது 1 கோடிக்கும் அதிகமான குற்றவாளிகளின் கைரேகைகள் உள்ளன. இதனால், ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் எளிய முறையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவில் வழக்குகளை தீர்க்கலாம். மேலும், 13 லட்சம் பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் தேசிய தரவுத்தளத்தில் இருப்பது குற்றங்களை கணிசமாக தடுக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x