Published : 09 Feb 2023 02:30 PM
Last Updated : 09 Feb 2023 02:30 PM
ட்விட்டரில் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் வசதி இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அது தொடர்பான கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர் என கூறப்பட்ட நிலையில், இந்திய ரூபாய் படி, மாதத்திற்கு ரூ.650 செலுத்தி மொபைல் பயன்பாட்டில் ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வலைதளமாக இருந்தால், ரூ.900 செலுத்தி ப்ளு டிக் பெற்றுக் கொள்ளலாம்.
வலைதளங்கள் வருடாந்திர சந்தாவும் செலுத்திக் கொள்ளலாம். அப்படிச் செலுத்தும்போது ரூ.1000 சலுகை கிடைக்கும். அதாவது, மாதாமாதம் ரூ.900 செலுத்துவதற்குப் பதில் ஆண்டு சந்தாவாக ரூ.6,800 மட்டும் செலுத்திக் கொள்ளலாம். இந்த வகையில் ரூ.1000-ஐ மிச்சப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என 15 நாடுகளில் இந்த ட்விட்டர் ப்ளூ டிக் திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ட்விட்டர் ப்ளூ டிக்கை எப்படிப் பெறுவது?
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தார். பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தார் ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க்.
இது தொடர்பாக அவர் அப்போது கூறும்போது, "பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்தக் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்" என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT