Published : 09 Dec 2022 03:56 PM
Last Updated : 09 Dec 2022 03:56 PM
புதுச்சேரி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தின் கரையை நெருங்கி வருகிறது. இந்தப் புயல் வெள்ளிக்கிழமை இரவு - சனிக்கிழமை அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் புயலை நிகழ் நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது windy.com எனும் வலைதளம். கடந்த 2014 வாக்கில் Windyty எனும் பெயரில் இந்தத் தளம் தொடங்கப்பட்டது. 2017 வாக்கில் விண்டி எனும் இந்தப் பெயரை பெற்றது. வீசும் காற்றை விரும்பும் மனம் படைத்த இவோ (Ivo) என்பவர் இதனை துவக்கியுள்ளார். புரோக்ராமிங் கலையில் கைதேர்ந்த அவர் தனது விருப்பத்தையும், தான் பெற்ற ஞானத்தையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்து விண்டிக்கு உயிர் கொடுத்துள்ளார். நாட்கள் கடக்க அவருடன் பலரும் இந்தப் பணியில் இணைந்துள்ளனர்.
சாட்டிலைட் துணைகொண்டு வானிலை சார்ந்த நிகழ்நேர தகவல்களை இந்தத் தளம் வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளம் கொண்ட போன்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும். 3டி உட்பட பல்வேறு லேயர்களில் வானிலை தகவல்களை இந்தத் தளத்தின் ஊடாக இணையதள பயனர்கள் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக, இந்தத் தளம் சூறாவளி காற்று இருக்கும் நேரங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவலை வழங்கி வருவதால் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. நிகழ் நேர தகவல் மட்டுமல்லாது புயலின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். மிகவும் எளிய முறையில் இதில் உள்ள டைம்லைனை ஸ்க்ரோல் செய்து பயனர்கள் அந்தத் தகவல்களை அறிந்து கொள்ளலாம். தற்போது தமிழகத்தை நெருங்கி வரும் மாண்டஸ் புயல் குறித்த தகவலை இந்தத் தளம் வழங்கி வருகிறது.
மாண்டஸ் புயல் நகர்வை காட்டும் விண்டி.காம் தளம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT