Published : 03 Dec 2022 08:17 PM
Last Updated : 03 Dec 2022 08:17 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவை தமிழகத்தின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2.05 கி.மீ நீள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 84% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
333 அடி தூண்கள் நிறுவுதல் மற்றும் தூண்களுக்கு இடையிலான 101 இடைவெளிகளை நிரப்புதல் பணிகள் அடங்கிய துணை கட்டமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து 99 அணுகு பால கண்கள் (துவார இடைவெளி ) பணிகளும் முடிவடைந்துள்ளன. அதில் 76 கர்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
செங்குத்து லிஃப்ட் இடைவெளி கர்டரின் கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது. பாலத்தின் ராமேஸ்வரம் முனையில் செங்குத்து லிப்ட் ஸ்பேனுக்கான அசெம்பிள் பிளாட்ஃபார்ம் தயாராகி வருகிறது. பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த அதிநவீன பாலம் நாட்டின் முதல் செங்குத்து லிப்ட் ரயில்வே கடல் பாலமாக இருக்கும். இது 2023 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.535 கோடி செலவில் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) மூலம் கடல் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் அதிக வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கும். இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான போக்குவரத்தை அதிகரிக்கும்.
ராமேஸ்வரத்தை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் 105 ஆண்டுகள் பழமையானது. மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுடன் மண்டபத்தை இணைக்க 1914-ஆம் ஆண்டு அசல் பாலம் கட்டப்பட்டது. 1988-இல் கடல் ரயில் பாலத்துக்கு இணையாக ஒரு புதிய சாலைப் பாலம் கட்டப்படும் வரை இரண்டு இடங்களையும் இணைக்கும் ஒரே இணைப்பாக இது இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT