Last Updated : 11 Nov, 2016 12:08 PM

 

Published : 11 Nov 2016 12:08 PM
Last Updated : 11 Nov 2016 12:08 PM

ஸ்மார்ட்போன் பாதுகாப்புக்கு 5 வழிகள்!

ஹேக்கர்களும், சைபர் குற்றவாளிகளும் இப்போது கம்ப்யூட்டர்களை மட்டும் குறிவைப்பதில்லை. ஸ்மார்ட்போன் மீதும் கவனத்தைத் திருப்பியுள்ளனர். ஸ்மார்ட்போனுக்கான தேவையும், அதன் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் மீதான தாக்குதலும் அதிகரித்திருக்கின்றன‌.

மால்வேர், ஃபிஷ்ஷிங் மோசடி, ரான்சம்வேர் எனப் பலவிதங்களில் விஷமிகள் ஸ்மார்ட்போன்களைக் குறிவைத்து, அதில் உள்ள முக்கியத் தகவல்களை அபகரிக்க முயன்று கைவரிசை காட்டுகின்றனர். எனவே ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அவசியம். எப்படி?

கிளிக் செய்யும் முன்...

இணைப்புகளைப் பார்த்தவுடன் கிளிக் செய்வது இயல்புதான். குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக் செய்தி, இமெயில்கள் எனப் பெரும்பாலானவற்றில் கிளிக் செய்து பார்க்கக்கூடிய இணைப்புகள் இருக்கின்றன. ஆனால் இவை பயனுள்ள இணையதளங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும் என்றில்லை. பல நேரங்களில் இணைய விஷமிகள் விரித்த வலையாகவும் இவை இருக்கலாம்.

இணைப்புகள் மூலம் கொக்கி போட்டு இழுத்து, போலியான இணைய‌தளங்களுக்கு அழைத்துச் சென்று, பயனாளிகளின் பாஸ்வேர்டு மற்றும் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துக்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது. அல்லது, இணைப்புகளை கிளிக் செய்வது மூலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மால்வேர்கள் உள்ளே புக நம்மை அறியாமல் அனுமதித்துவிடலாம். எனவே, எதையும் கிளிக் செய்யும் முன் நன்றாக யோசிக்கவும். இணைப்புகள் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது.

செயலிகளில் கவனம்

புதுப்புதுச் செயலிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும்போது நமக்கும் புதிய செயலிகள் தேவைப்படவே செய்கின்றன. ஆனால் எந்தச் செயலியையும் பார்த்தவுடன் தரவிறக்கம் செய்துவிட வேண்டாம். முதலில் அந்தச் செயலி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

‘ஆப் ஸ்டோர்’ அல்லது ‘பிளே ஸ்டோரி’ல் செயலி தொடர்பான அறிமுகம் மற்றும் விமர்சனங்களைப் படித்துப் பார்க்கவும். முக்கியமாக, செயலிகள் எத்தகைய அனுமதியைக் கோருகின்றன என கவனிக்கவும். செயலிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்றும் பார்க்கவும். செயலி பற்றி மற்றவர்களின் கருத்துகளை அறிய முயற்சிக்கவும்.

அப்டேட்

நீங்கள் பயன்படுத்தும் போனின் இயங்கு தளம் மற்றும் அதில் உள்ள செயலிகள் அப்டேட் செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். பெரும்பாலான அப்டேட்கள் குறைகள் மற்றும் ஓட்டைகளைச் சீராக்கும் வகையில் அமைந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியமான விஷயம்.

இணைய துண்டிப்பு

நீங்கள் இணைய வசதியைப் பயன்படுத்தினாலும்கூட 24 மணி நேரமும் இணையத்திலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே பயன்பாடு முடிந்ததும், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு, மீண்டும் தேவைப்படும்போது இயக்கிக் கொள்ளவும். இருப்பிடத்தை உணர்த்தும் சேவைகளையும்கூடத் தேவை இல்லை எனில் செயலிழக்கச் செய்யவும்.

அதேபோல இணையம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் இருந்தால், ஷாப்பிங் செய்த தளம் அல்லது செயலியிலிருந்து மறக்காமல் லாக் அவுட் செய்யவும்.

பேக் அப்

ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் அத்துமீறி நுழைந்து அதை முடக்கி வைத்து, விடுவிப்பதற்குப் பணம் கேட்டு மிரட்டும் ரான்சம்வேர் மோசடி பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுபோன்ற தாக்குதல் ஏற்பட்டால் பாதிப்பைக் குறைக்க உங்கள் போனில் உள்ள முக்கியத் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை அவ்வப்போது பாதுகாப்பாக ‘பேக் அப்’ எடுத்து வைக்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x