Published : 26 Oct 2022 01:27 PM
Last Updated : 26 Oct 2022 01:27 PM
கலிபோர்னியா: உலகளவில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த முடக்கத்திற்கான காரணம் குறித்து வாட்ஸ்அப் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசெஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பவும், வாட்ஸ்அப் வெப் மற்றும் செயலியை பயன்படுத்தவும் முடியவில்லை என சொல்லப்பட்டது. அதன் காரணமாக வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் தொடர்பு முடங்கியது. சிக்கலுக்கு வெகு விரைவில் தீர்வு காணப்படும் என மெட்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். அது போலவே அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தங்கள் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் இந்த முடக்கத்திற்கு காரணம் என மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருந்தாலும் அது குறித்து விளக்கம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப் சேவை முடங்கியபோது டிஎன்எஸ் (டொமைன் நேம் சிஸ்டம்) சிக்கல்தான் காரணம் என அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்து. கிட்டத்தட்ட இப்போதும் அதே மாதிரியான சிக்கலை வாட்ஸ்அப் எதிர்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது. அதனை மெட்டா உறுதி செய்ய வேண்டி உள்ளது.
வாட்ஸ்அப் முடக்கம்!
இந்திய நேரப்படி அக்டோபர் 25 மதியம் 12.30 முதல் 2.30 வரையில் வாட்ஸ்அப் சேவைகள் முடங்கி இருந்தன. வாட்ஸ்அப் பயனர்களால் மெசேஜ் அனுப்ப, பெற மற்றும் ஆடியோ, வீடியோ அழைப்புகளும் மேற்கொள்ள முடியவில்லை. டவுன்டிடக்டர் கொடுத்த தகவலின் படி வாட்ஸ்அப் முடங்கி இருந்த நேரத்தில் சுமார் 69 சதவீத பயனர்களால் மெசேஜ் அனுப்ப மற்றும் பெற முடியவில்லை எனத் தெரிகிறது. அதே போல 21 சதவீத பயனர்களுக்கு சர்வர் சிக்கலும், 9 சதவீத பயனர்கள் எதிர்கொண்ட சிக்கலின் விவரம் தெரியவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT