Published : 30 Jun 2014 10:45 AM
Last Updated : 30 Jun 2014 10:45 AM
தகவல் தொடர்புத் துறை கிடுகிடுவென வளர்ந்துவருகிறது. நேற்று வாங்கிய ஸ்மார்ட் போன் இன்று பழைய மாடலாகிவிடுகிறது. புதுசு புதுசு என்பதுதான் இளைஞர்களின் தாரக மந்திரமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியின் தொடக்கத்தில் செங்கல் அளவுக்குப் பெரிய மொபைல் போன்கள்தான் சந்தையில் அறிமுகமாயின. சிலர் மொபைல் போன்களை ப்ரீப் கேஸில் வைத்து எடுத்துவந்தார்கள். ஆனால், அத்தகைய பெரிய சைஸ் போன்களுக்கு மவுசு குறைந்துகொண்டே வந்தது. காரணம் சந்தையில் புதிதாக அறிமுகமான சிறிய சைஸ் போன்கள், பெரிய சைஸ் போன்களை ஓரங்கட்டின. இதனால் கைக்கு அடக்கமான கச்சிதமான போன்களின் காட்டில் மழை பொழியத் தொடங்கியது. ஆனால், இப்போது நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் அளவில் சிறிய போன்கள் சீந்துவாரின்றிக் கிடக்கின்றன. ஏனெனில் வீடியோ, இணையம் போன்ற பயன்பாடுகளுக்கெல்லாம் அகலத் திரைகள்தான் அனுகூலமாக உள்ளன. ஆகவே இப்போதெல்லாம் பெரிய திரை கொண்ட மெகா சைஸ் ஸ்மார்ட் போன்கள்தான் அனைவருக்கும் பிடிக்கின்றன என்று சொல்கிறது அக்சஞ்சர் நிறுவனம் நடத்திய சர்வே ஒன்று.
உலகமெங்கிலும் உள்ள சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த 23 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வுக் காகப் பேசியுள்ளது அக்சஞ்சர் நிறுவனம். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் தாங்கள் புதிய ஸ்மார்ட் போன்களை வாங்கப்போவ தாகவே கூறியுள்ளனர். அவர்களில் 48 சதவீத்தினர் 5-7 அங்குலம் அகலமுள்ள பெரிய திரை ஸ்மார்ட் போன்களை வாங்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆப்பிள் ஐபோனைவிட அதிகமாக ஆண்ட்ராய்டு சாப்ட்வேரில் இயங்கும் போன்கள் விற்பனை ஆகின்றன என்கிறார்கள் வர்த்தகர்கள்.
உதாரணமாக சாம்சங்கின் கேலக்ஸி மாடல்களைச் சொல்கிறார்கள். விற்பனையின் காரணம் அகலத் திரை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படியான விருப்பங்களால்தான் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்5 மாடலின் திரையை 5.1 அங்குலம் அகலம் கொண்டதாகவும், கேலக்ஸி நோட் 3-ன் திரை அகலத்தை 5.7 அங்குலமாகவும் உருவாக்கியுள்ளது.
அகலத் திரைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத ஆப்பிள் ஐபோனும் இப்போது அகலத் திரையில் கால் பதிக்கிறது. ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் இரண்டின் அம்சங்களையும் கொண்ட பேப்லெட் மாடல்களை உருவாக்க உள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 67 சதவீதத்தினர் பெரிய திரை போன்களையே ஆதரித்துள்ளனர். பலர் தனித்தனியே போனையும் டேப்லெட்டையும் தூக்கிச்சுமக்கப் பிரியப்படுவதில்லை. அதனால் டேப்லெட்டின் அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு எளிதில் மாறிவிடுகிறார்கள். இந்த மாற்றத்தால், அதாவது பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானால் அது டேப்லெட்டின் விற்பனையைப் பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 6 வரும் செப்டம்பர் 19 அன்று வெளிவர உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4.7 அங்குல அகலம் கொண்ட திரையைக் கொண்ட இந்த ஐ-போன் இரண்டு மாடல்களில் கிடைக்கும். ஒரு மாடல் மெமரி கார்டு 32 ஜிபியையும் மற்றொன்று 64 ஜிபியையும் சேமிப்புத் திறனாகக் கொண்டிருக்கும். 16 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட மாடல் கிடைக்குமா என்பது பற்றித் தகவல் எதுவும் இல்லை. 32 ஜிபி மாடலின் விலை சுமார் ரூ. 51,000;64 ஜிபி மாடலின் விலை சுமார் ரூ. 61,000.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT