Published : 02 Jun 2014 12:00 AM
Last Updated : 02 Jun 2014 12:00 AM
நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது கருவி உருவாக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது. எல்லையற்று விரிகிறது தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி. அதன் ஒரு பகுதியாக இண்டெல் நிறுவனம் புதிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளது. ஜிம்மி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி ரோபோவின் பாகங்கள் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்த ரோபோ பேசும், நடக்கும் ஏன் விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தைக்கூடக் கொண்டுபோய்க் கொடுக்கும்.
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஜிம்மி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பளீர் வெள்ளை நிறத்தில் நுகர்வோர் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கைக்கு அடக்கமாக உள்ளது. இதன் உயரம் 2 அடி மட்டுமே. தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட ஜிம்மி பார்வையாளர்களைப் பார்த்துக் கையசைத்துள்ளது.ஜிம்மியிடம் நமக்குத் தேவையான விதத்தில் புரோக்ராம் கொடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பாடுவது, மொழிமாற்றம் செய்வது, ட்வீட் அனுப்புவது போன்ற செயல்களைச் செய்வதற்கான புரோக்ராமை அதில் உள்ளீடு செய்தால் போதும். அது அத்தனை வேலைகளையும் பார்க்கும்.
இண்டெல் நிறுவனத்தில் தலைமை அதிகாரி பிரைன் கிர்ஸானிச் மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் போன்ற கருவிகளின் உருவாக்கத்தில் தனது தொழில்நுட்பத் திறமையைக் காட்டிவிட்டு இப்போது ரோபோ பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இந்த ரோபோ இந்தாண்டின் கடைசியில் நுகர்வோரின் கைக்குக் கிடைக்கலாம் என இண்டெல் நிறுவனம் கூறுகிறது. ரோபோவை வாங்கும் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான செயல்களைச் செய்யும்படியான புரோகிராம்களை உள்ளீடு செய்துகொள்ளலாம். இந்த புரோக்ராம்களை டவுன்லோடு செய்துகொள்ளும் அப்ளிகேஷனாகப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.
தொடக்கத்தில் இந்த ரோபோவின் விலை 1,600 அமெரிக்க டாலராக இருக்கும். ஆனால் ஐந்தாண்டுகளில் அதன் விலை ஆயிரம் டாலராகக் குறைய வாய்ப்பு உள்ளது என இண்டெல் தெரிவித்துள்ளது. ஆக இப்போதைக்கு இதன் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT