Last Updated : 01 Apr, 2016 11:21 AM

 

Published : 01 Apr 2016 11:21 AM
Last Updated : 01 Apr 2016 11:21 AM

இணையத்தை உருகவைத்த தாத்தா!

சமூக ஊடகச் செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் தன் பேரப் பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழவைக்கும் இந்தக் கதையில் பேரப் பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோடு, இணையப் புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன்கதைச் சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்குத் தாத்தாவோ பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச் செல்லாமல் இருந்தால், அந்தத் தவற்றைச் சரிசெய்துகொண்டு பாசக்காரப் பேரப் பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்தக் கதை உணர்த்தும் நீதி இதுதான்... தாத்தாக்களும் பாட்டிகளும் அன்புக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதை ஓரளவுக்காவது தீர்த்துவைப்பது பேரப் பிள்ளைகளின் கடமை!

இணையத்தை மெல்லப் பிடித்து உலுக்கியிருக்கும் இந்தக் கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ட்விட்டரில் பகிரப்பட்ட ஓர் ஒளிப்படத்துடன் தொட‌ங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் ஒளிப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்ஸே ஹார்மன்தான் இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் ( >https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்துகொண்டார். அந்தப் படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்தத்தின் சாயலும் இருந்தது. “பாப்பாவுடன் (தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப் பிள்ளைகளுக்காக 12 பர்கர்களைத் தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும்தான் அதைச் சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்தபடி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு இந்தச் செய்தியைப் படிக்கும்போது, மனதில் மெல்லிய சோகம் எழும். ‘ஆறு பேரப் பிள்ளைகளுக்காகத் தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எட்டிப் பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே! பாவம் அந்தத் தாத்தா!’ என்று நினைக்கத்தோன்றும்.

அந்தப் படத்தை ட்விட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இதுபோன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ பேரப் பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சைத் தொட்டு இந்தப் படத்தை ரீட்வீட் மூலம் பகிர்ந்துகொள்ளத் தூண்டியது. அவ்வளவுதான். அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்தப் படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்தப் படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்துத் தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச் செல்லாமல் இருப்பதைக் குற்றவுணர்வுடன் பகிர்ந்துகொண்டனர். சிலர் வராமல் போன அந்தப் பேரப் பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை. இதன் வைரல் தன்மையும், அதற்குப் பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றிய‌ செய்தியை வெளியிட வைத்தன. ‘சோகமான தாத்தா’ எனும் அடைமொழியுடன் வெளியான செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தன.

ஆனால் இந்தக் கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் சில திருப்பங்களும் காத்திருந்தன. பரவலாகக் கருதப்பட்டது போல இதர‌ ஐந்து பேரப் பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் எனத் தூற்றியதை மீறி அவர்கள் பாசக்காரப் பேரப் பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

விஷயம் என்னவென்றால், பேரப் பிள்ளைகளில் இன்னொருவர் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வராத‌தற்குக் காரணம் தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்குச் சரியாகத் தகவல் தெரிவிக்கப்படாததுதான். தாத்தா தன் மகனிடம் இது பற்றித் தெரிவித்த தகவலை அந்த மறதிக்கார அப்பா தன் மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால்தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற ‘டெய்லி மெயில்’ நாளிதழ் இந்த வெளிவராத பின்னணித் தகவல்களைத் தேடிப்பிடித்துச் செய்தி வெளியிட்டது.

ட்விட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர், எல்லோரும் தன்னைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துக் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்தத் திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழைத்து ‘நான் பர்கர் தயார் செய்கிறேன்’ எனக் கூறினார்.

அந்த விருந்து கடந்த‌ 26-ம் தேதி நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் அதிகமான புதிய நண்பர்கள் இந்த தாத்தாவுக்குக் கிடைத்திருக்கின்றனர். தாத்தா மீதான தங்களின் பாசத்தை வெளிப்படுத்த அந்தப் பேரப் பிள்ளைகள் ‘சேட்பாப்பா.காம்’ ( >www.sadpapaw.com) எனும் இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் தாத்தாவின் படம் அச்சிடப்பட்ட‌ டி ஷர்ட் மற்றும் தொப்பிகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x