Last Updated : 19 Feb, 2016 12:04 PM

 

Published : 19 Feb 2016 12:04 PM
Last Updated : 19 Feb 2016 12:04 PM

இளமை.நெட்: பூகம்ப எச்சரிக்கைச் சேவைக்கு ஒரு செயலி!

ஸ்மார்ட்போன்கள் நமக்குப் பழகிவிட்டன. அவை இன்றியமையாததாக‌வும் ஆகிவிட்டன. ஆனால், அவற்றின் அருமையை நாம் முழுவதுமாக உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஸ்மார்ட்போன்களின் சர்வசகஜமான தன்மை அவற்றால் சாத்தியமாகக்கூடிய அற்புதங்கள் பற்றி நாம் வியப்புக் கொள்வதை மழுங்கடித்துவிட்டது.

ஆனாலும் என்ன, உள்ளங்கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பயன்பாடுகளும், செயலிகளும் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் ‘மைஷேக்' செயலி, நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை பூகம்பத்தைக் கண்டறிய உதவும் சாதனமாக மாற்றுக்கூடியதாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியுள்ள இந்தச் செயலி ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்களைக் கொண்டு பூகம்ப அதிர்வுகளை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்யக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு இந்தச் செயலி உலகம் முழுவதும் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான ஸ்மார்ட் போன்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஊர் கூடித் தேர் இழுப்பது போல ‘மைஷேக்' செயலி எண்ணற்ற ஸ்மார்ட் போன்களை இணைக்கும் மாபெரும் வலைப்பின்னலை உருவாக்கி பூகம்ப அதிர்வுகளைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் இணைக்கப்ப‌ட்ட ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை தவிர, இந்த மகத்தான நோக்கத்தை நோக்கி முன்னேற அதிர்வுகளைப் பகுத்துணரும் மென்பொருள் ஆற்றலிலும் மேம்பாடு தேவைப்படுகிறது. எனினும் கோட்பாட்டு அளவில் பார்க்கும் போது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்மார்ட் போன்களைக் கொண்டு செயல்திறன் மிக்க பூகம்ப எச்சரிக்கை வசதியை உருவாக்கும் நம்பிக்கையை ‘மைஷேக்' செயலி கொண்டுள்ளது.

ஸ்மார்ட் போனில் ஜி.பி.எஸ். மற்றும் சென்சார் வசதியை பூகம்ப கண்டறிதலுக்காகப் பயன்படுத்தும் முயற்சி சில ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் விரைவில் பெரும் பாய்ச்சல் நிகழக்கூடும் என்பதற்கான அறிகுறியாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்கிலி பூகம்ப‌ ஆய்வு மையம் ‘மைஷேக்' செயலியை உருவாக்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இதன் முன்னோட்ட வடிவம் சமீத்தில் அறிமுகமானது.

ஸ்மார்ட்போன்களில் இருக்கும், ஆக்சலரோமீட்டர் எனும் அசைவை உணரும் சென்சார்களைத்தான் இந்தச் செயலி மையமாகக் கொண்டிருக்கிறது.

பூமியின் மேற்பரப்பில் புதைக்கப்படும் சென்சார்கள் எப்படி பூகம்பத்திற்கு முந்தைய அதிர்வுகள் உண்டாகும்போது அவற்றை உணர்கின்றனவோ அதே போலவே ஸ்மார்ட்போன் சென்சார்களாலும் பூகம்ப அதிர்வை உணர முடியும் என்பதுதான் இந்தச் செயலியை இயக்கும் எண்ணம்.

ஸ்மார்ட் போன்களால் பூமி அதிர்வுகளை உணர முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், சாதாரணமாக போனை அசைப்பது, இடம் மாற்றி வைக்கும் போது இதே உணர்வு ஏற்படும்தானே என்று சந்தேகம் எழலாம். உண்மைதான். ஆனால் இந்தச் செயலி, வழக்கமான ஸ்மார்ட்போன் நகர்த்தல் அல்லது அசைவுகளுக்கும், பூகம்ப அதிர்வுக்கும் இடையிலான வேறுபாட்டை கிரகித்துக்கொள்ளக்கூடிய ஆற்றலோடு வடிமைக்கப்பட்டுள்ளது. அதற்கான விஷேச ‘அல்காரிதம்' அதன் மூளையாகச் செயல்படுகிறது.

சோதனைகளில் இந்தச் செயலி சாதாரண நகர்த்தலுக்கு மத்தியில், பூகம்ப அதிர்வு ஒலிப்பதிவுகளைச் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறது. நடைமுறையில் இது எப்படி செயல்படும் என்றால், குறிப்பிட்ட இடத்தில் அதிர்வு உணரப்பட்டவுடன் இந்தச் செயலி அந்தத் தகவலை, இருப்பிடம் மற்றும் அளவு பற்றிய விவரங்களுடன் மைய சர்வருக்கு அனுப்பி வைக்கும். இதே போன்ற அதிர்வுகள் அருகாமையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் இருந்தும் வருமாயின் அவற்றை ஆய்வு செய்து பூகம்ப எச்சரிக்கைத் தகவலை அனுப்பி வைக்கிறது. பூகம்பத்தின் மையப் பகுதியில் இருந்து அதன் பாதிப்பு எல்லைக்குள் இருப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை அனுப்பப்படும்.

ஆக, பூகம்பம் தாக்க உள்ள தருணங்களில் இந்தச் செயலி அது பற்றி சில நொடிகளுக்கு முன் எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கும்.

இந்தச் செயலி முதலில் ஆயிரக்கணக் கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஓரிரு பூகம்ப அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டால் இந்த அமைப்பில் உள்ள எல்லா அம்சங்களும் சரியாகச் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள முடியும் என்று, பெர்கிலி பூகம்ப ஆய்வு மையத்தின் இயக்குந‌ரான ரிச்சர்டு ஆலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘உலகம் முழுவதும் விரியக்கூடிய அடர்த்தியான பூகம்ப அதிர்வு உணர் வலைப்பின்னலாக இது உருவாகும்' என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் செயலி மூலம் திரட்டப்படும் தகவல்கள் பூகம்பம் பற்றிய புரிதலை மேம்படுத்துவதுடன், உரிய நேரத்தில் முன்கூட்டியே பூகம்ப எச்சரிக்கைகளை அளித்து பாதிப்பைக் குறைப்பதையும் சாத்தியமாக்கும் என்கிறார் ஆலன்.

பொதுவாக பூகம்ப நிகழ்வுகளின் போது சில நொடிகள் என்பதே உயிர் பிழைப்பதற்கும், பலியாவதற்கும் போதுமான அவகாசம்.

மேலும் பெரும்பாலும் பூகம்ப பாதிப்பை விட இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதாலேயே அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. முன்கூட்டியே எச்சரிக்கை பெறுவதன் மூலம் இந்தப் பொன்னான அவகாசத்தைப் பெற்று உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, இயக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரெயில்களின் அதிர்வை உணர்ந்தவுடன் தானாக நிற்கச் செய்யலாம். அதே போல அடுக்கு மாடிக் கட்டிடங்களில் லிப்ட்டுகள் நடுவழியில் அல்லாமல், தளத்தின் மேல் அல்லது கீழே உள்ள வாயிலுக்கு அருகே வந்து நிற்கச் செய்யலாம்.

ஏற்கெனவே கலிபோர்னியா போன்ற பகுதிகளில் பொருத்தப்பட்ட பூமிக்கு அடியிலான சென்சார்கள் வலைப்பின்னல் திரட்டும் தகவல்களுடன் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தச் செயலி செயல்படும் என்கிறார் ஆலன்.

சென்சார்களை எல்லா இடங்களிலும் பொருத்துவது சாத்தியமில்லை, ஆனால் எல்லா இடங்களிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் இந்தச் செயலி சிறந்த முறையில் பூகம்பத்தை உணரக்கூடிய ஆற்றலை அளிக்கும் என்கிறார் அவர்.

அதிலும் குறிப்பாக நேபாளம் போன்ற நாடுகளில் இது பேருதவியாக இருக்கும் என்கிறார். கடந்த ஆண்டு பூகம்பத்தால் பாதிப்புக்குள்ளான நேபாளத்தில் 6 மில்லியன் போன்கள் இருக்கின்றன. தலைநகர் காத்மாண்டுவில் மட்டும் 6 லட்சம் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவை போதுமானவை என்கிறார்.

ஆனால் இதற்கு இந்தச் செயலி போதுமான அளவில் ஸ்மார்ட் போனில் இயங்கும் நிலை வரவேண்டும். 68 சதுர கிமீ பரப்பில் 300 ஸ்மார்ட்போன்களிலாவது செயலி இயங்கினால்தான் செயல்திறன் இருக்கும். உலகில் உள்ள பெரும்பாலான போன்களில் இந்தச் செயலி பொருத்தப்படும் நிலை வரவேண்டும் என ஆலன் மற்றும் அவரது சகாக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப, இந்தச் செயலி பயனாளிகளின் போனில் அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூகம்பம் தொடர்பான தகவல்களையும் இதன் மூலம் பயனாளிகள் பெறலாம்.

மைஷேக் செயலிக்கான இணைய தளம்: >http://myshake.berkeley.edu/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x