Published : 09 Jul 2021 05:51 PM
Last Updated : 09 Jul 2021 05:51 PM
பெருந்தொற்றுக் கால ஊக்கத்தொகையாக ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டில் பகுதி நேர, மணி நேரக் கணக்கில் பணிபுரிவோர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார் துறைகள் முன்னெப்போதையும் விடத் தொய்வின்றி இயங்கி வருகின்றன. அவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் 1,75,508 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பெருந்தொற்றுக் கால ஊக்கத்தொகையாக ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ''மார்ச் 31, 2021 அன்றோ அல்லது அதற்கு முன்போ பணியில் இணைந்த, கார்ப்பரேட் துணைத் தலைவர் பதவிக்குக் கீழே பணியாற்றும் அனைவருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பெருந்தொற்றுக் கால ஊக்கத்தொகையைப் பரிசாக அளிக்கிறது.
இது நிறுவனத்தின் பகுதி நேர ஊழியர்கள், மணி நேரக் கணக்கில் பணிபுரிவோர் என அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பணியாற்றும் அனைத்துத் தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனினும் மைக்ரோசாஃப்ட்டின் துணை நிறுவனங்களான லிங்க்டுஇன், கிட்ஹப் மற்றும் ஸெனிமேக்ஸ் நிறுவன ஊழியர்கள் யாருக்கும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படாது.
ஊக்கத்தொகையை வழங்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் தேவைப்படும். இது மைக்ரோசாஃப்ட்டின் 2 நாள் மொத்த வருமானத்தை விடக் குறைவாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய 45 ஆயிரம் ஊழியர்களுக்குத் தலா 1000 டாலர்கள் பணத்தைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT