Published : 25 Dec 2015 01:21 PM
Last Updated : 25 Dec 2015 01:21 PM
ஆண்டின் இறுதியில் வெளியான அந்த வீடியோ யூடியூப்பில் ஹிட்களை அள்ளி 2015-ன் வெற்றிகரமான வீடியோக்களில் ஒன்றாகிக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இணையவெளி முழுவதும் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோ ரசித்து மகிழக்கூடியதாக இருப்பதோடு நம் காலத்து இணையக் கலாச்சாரத்தைப் புன்னகைக்க வைக்ககூடியதாகவும் இருக்கிறது.
அதோடு, நமது பாலின பார்வையின் சார்பு நிலை தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு வெற்றிகரமான வீடியோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது,
'இன்ஸ்டாகிராம் கணவர்' (Instagram Husband) எனும் அந்த வீடியோ.
விலா நோகச் சிரிக்க வைக்கும் வழக்கமான யூடியூப் வீடியோக்களில் இருந்து மாறுபட்டது இந்த வீடியோ. இது பார்க்கும்போதே மெலிதாகப் புன்னகைக்க வைக்கும். இன்ஸ்டாகிராம் மோகம் இந்த அளவுக்கு இருக்கிறதா என்று யோசிக்கவும் வைக்கும்.
இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒளிப்படப் பகிர்வுச் செயலி. வீடியோவுக்கு எப்படி யூடியூப்போ அப்படித்தான் ஒளிப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம்!
ஸ்மார்ட்போன் தலைமுறையில் பலருக்கு ‘செல்ஃபி' என்படும் சுயபடங்களை எடுத்துத் தள்ளும் மோகம் இருப்பது போலவே, பலருக்கும் பார்க்கும் காட்சிகளை எல்லாம் 'கிளிக்' செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் இருக்கிறது.
இப்படி இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களைப் பகிர்வதன் மூலம் ஆயிரக்கணக்கிலும், ஏன் லட்சக்கணக்கிலும் ஃபாலோயர்களைப் பெற்று இணைய நட்சத்திரங்களானவர் பலர்! இன்ஸ்டாகிராம் உணவுக் கலைஞர்கள், யோகா நட்சத்திரங்கள், இன்ஸ்டாகிராம் சுட்டிகள் என இதற்கு நீளமான பட்டியல் இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் தங்களையும், தங்கள் கலையையும் வெளிப்படுத்திப் புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் தவிர பல சாமானியர்கள் தங்கள் வாழ்க்கைக் காட்சிகளை எல்லாம் ‘கிளிக்' செய்து ஒளிப்படங்களாகப் பகிரும் பழக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் எதிர்பார்ப்பது, சிறிது கவனமும் நிறைய லைக்குகளும்தான்.
இதில் இன்ஸ்டாகிராம் பெண்களும் இருக்கின்றனர். அவர்கள் பின்னே இன்ஸ்டாகிராம் கணவர்களும் இருக்கின்றனர். இவர்களைத்தான் இந்த வீடியோவும் அடையாளம் காட்டுகிறது.
மூன்று நிமிடத்திற்கும் குறைவாக ஓடக்கூடிய இந்த வீடியோவில், ஒரு ஆண் “எனது பெயர் டிரே. நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணவன்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். வரிசையாக மேலும் இரண்டு ஆண்கள் அறிமுகமாகி இன்ஸ்டாகிராம் கணவர்களாகத் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதாவது, தத்தமது மனைவிகள் இன்ஸ்டாகிராமில் ஒளிப்படங்களை வெளியிடுவதற்காக அவர்களை ஸ்மார்ட்போனில் படம் பிடிக்க வேண்டியிருக்கும் கடமை இருப்பதைக் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு அழகான இன்ஸ்டாகிராம் பெண்ணுக்கும் பின்னும் என்னைப் போல ஒருவர் இருக்கிறார். நான் அடிப்படையில் ஒரு சுவர் போல் என்கிறார் ஒருவர். இன்னொருவரோ, மனைவியின் புகைப்படங்களுக்கு இடம் வேண்டும் என்பதால் என்னுடைய செல்போனில் உள்ள எல்லா செயலிகளையும் நீக்கிவீட்டேன் என்கிறார். மனைவிக்கு நான் செல்ஃபி ஸ்டிக் போல என்று ஒருவர் குறைபட்டுக்கொள்கிறார்.
இப்படியாக மூன்று கணவர்களும் தங்கள் மனைவியை இன்ஸ்டாகிராம் புகைப்படம் எடுக்கத் தாங்கள்படும் அவஸ்தையை நயமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிலும் ஒருவரது மனைவி, தன்னை வாகாகப் படம் எடுப்பதற்காக கணவரிடம் இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள் என்று கூறியபடி வீட்டின் கூரை வரை துரத்துகிறார்.
இப்படி வீடியோ முழுவதும், மனைவியை நேர்த்தியான இன்ஸ்டா கிராம் ஒளிப்படம் எடுப்பதற்காக கணவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் காட்சிகளாக விரிகின்றன. பெண்களின் இன்ஸ்டாகிராம் மோகத்தைக் கணவர்கள் பார்வையில் விவரிக்கும் இந்தத் தன்மைதான் இந்த வீடியோவை யூடியூப்பில் வைரலாக்கி இணையம் முழுவதும் பேச வைத்துள்ளது.
அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் ‘தி மிஸ்டிரி ஹவர்ஸ்' எனும் பெயரில் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்திவரும் குழு இந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறது. நிகழ்ச்சியை நடத்திவரும் ஜெப் ஹவுட்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த வீடியோவை உருவாக்கினார். இதில் அவரது மனைவியும் நடித்துள்ளார்.
உண்மையில் மனைவியின் இன்ஸ்டாகிராம் பழக்கத்தின் மிகை வடிவமே இந்த வீடியோ என்கிறார் அவர். நண்பர்கள் வட்டத்திலும் பலருக்கு இந்த அனுபவம் இருப்பதாகச் சொல்கிறார். இந்தப் பழக்கத்தைக் கிண்டலடிக்கும் எண்ணம் பற்றி நண்பர்களிடம் விவாதித்துக்கொண்டிருந்தபோது எல்லோராலும் இதைப் புரிந்துகொள்ள முடியும் எனும் நம்பிக்கை ஏற்பட்டதால் வீடியோ தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டபோது, இது இந்த அளவுக்கு பெரும் வரவேற்பைப் பெறும் என நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் முதல் சில மணிநேரங்களில் சில ஆயிரம் ஹிட்களைப் பெற்ற வீடியோ அதன் பிறகு பல ஆயிரங்களைக் கடந்து, லட்சங்களையும் கடந்திருக்கிறது. இந்தப் பேட்டிக்கு முன் 20 லட்சம் ஹிட்களாக இருந்தது, பேட்டிக்கு பின் 25 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த அளவு புகழை ஹவுட்டன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, இதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. வீடியோ வைரலாகப் பரவிய நிலையிலேயே சூட்டோடு சூட்டாக இன்ஸ்டாகிராம் கணவர் எனும் பெயரிலேயே இணையதளம் ஒன்றை அமைத்து, இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டதோடு, இதே போல சோகக் கதை கொண்ட உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் கணவர்கள் தங்கள் அனுபவத்தையும், ஒளிப்படத்தையும் இங்கு வெளியிடலாம் என தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் இன்ஸ்டாகிராம் கணவரா? எனில் உங்கள் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்' எனக் கோரும் இந்த இணையதளமும் பிரபலமாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் மோகத்தை மிக நயமாக லேசான அங்கதத்துடன் கிண்டல் செய்துள்ளதாக இந்த வீடியோ பாராட்டப்பட்டாலும், ஒரு சிலர் இதன் பின்னே பாலினச் சார்பு ஒளிந்திருப்பதாகவும் குறை கூறியுள்ளனர். ஆண்களை மையமாக வைத்துக்கொண்டு பெண்கள் ஒளிப்பட மோகம் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் கூறியுள்ளார்.
ஆண்களைப் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகக் கருதுவதை இது உணர்த்துகிறது என இன்னொருவர் கூறியுள்ளார். ஆனால் ஹவுட்டன், இந்த வீடியோ மூலம் இப்படி எந்தக் கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை என்றும், இதைப் பார்க்கும் பலரும் இது நான்தான் என்றோ, அல்லது இது என் கணவர் என்றோ உணர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ பற்றி செய்தி வெளியிட்டுள்ள பெண்ணிய இணைய தளமான ‘ஜெஸெபெல்' தளமும் இந்த விவாதத்தை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதே போலவே இசைக்கலைஞர்களின் மனைவிகள் படும் பாட்டை நகைச்சுவையாக விவரிக்கும் 'தி பேண்ட் வைஃப்' வலைப்பதிவையும் (http://thebandwifeblog.com/) சுட்டிக்காட்டியிருக்கிறது கவனிக்க வேண்டிய விஷயம்.
இன்ஸ்டாகிராம் கணவர் இணைதளம்: >http://instagramhusband.com/
இன்ஸ்டாகிராம் கணவர் வீடியோவை காண
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT