Published : 02 Jun 2014 12:00 AM
Last Updated : 02 Jun 2014 12:00 AM
ஏசர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஏசர் ஐகானிக் டேப் 8 எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த டேப்லெட் ஜூலையிலிருந்து சந்தையில் புழக்கத்தில் விடப்படும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் விலை குறித்து நிறுவனம் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த டேப்லெட் போக ஏசர் லிக்யுட் இ 700, ஏசர் லிக்யுட் இ 600, ஏசர் லிக்யுட் இஸட் 200, ஏசர் லிக்யுட் எக்ஸ் 1, ஏசர் லிக்யுட் ஜேடு ஆகிய ஐந்து ஸ்மார்ட்போன்களையும் ஏசர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏசர் ஐகானிக் டேப் 8 ஆண்ட்ராய்டு 4.4 தொழில்நுட்பத்தில் செயல்படும். மிகச் சமீபத்திய ஆண்ட்ராய்டு வகை இது. 8 அங்குலத்தில் எச்டி தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஐபிஎஸ் டிஸ்ப்ளே துல்லியமான திரைக்கு உத்ரவாதமளிக்கிறது. ஜீரோ ஏர் கேப் தொழில்நுட்பத்தில் உருவான இந்த டேப்லெட் குறைவான ஆற்றலில் விரைவாகச் செயல்படும் குணாதிசயம் கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள். இதன் தொடுதிரையைத் தொடுதலின் மூலம் உடனடியாக உயிர்ப்பிக்க முடியும். அதற்கான நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டை 2 ஜிபி ராமுடன் இணைந்த இண்டெல் ஆட்டம் இஸட் 3745 க்வாட்கோர் புராஸஸர் இயக்குகிறது. பேனலின் பின்பக்கத்தில் 5 எம்பி லென்ஸும் முன்பக்கத்தில் 2 எம்பி லென்ஸும் கொண்ட கேமராக்கள் இதில் உள்ளன. டேப்லெட்டின் சேமிப்புத் திறன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு உதவியுடன் இந்தச் சேமிப்புத் திறனை அதிகரித்துக் கொள்ளலாம். வைஃபை, ப்ளூடூத் மைக்ரோ யூஎஸ்பி போன்ற தொழில்நுட்பங்கள் தகவல்களைப் பெறவும் பரிமாறவும் உதவுகின்றன.
8.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இந்த டேப்லெட்டின் எடை வெறும் 360 கிராம். இப்போதைக்கு இந்த டேப்லெட் அமெரிக்கச் சந்தைகளில் கிடைக்க வாய்ப்பில்லை, எதிர்வரும் நாட்களில் இந்நிலைமை மாறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT