Published : 18 Jul 2020 08:07 PM
Last Updated : 18 Jul 2020 08:07 PM
டிக் டாக் தளத்துக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ள ரீல்ஸ் தளத்தை அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் தளம், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பகிர்தலைப் பிரதானப்படுத்தி செயல்படுகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் டிக் டாக் செயலிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பை மனதில் வைத்து, அதைப் போலவே அம்சங்கள் இருக்கும் ரீல்ஸ் என்ற வசதியை இன்ஸ்டாகிராம் உருவாக்கியுள்ளது.
தற்போது இந்த வசதி அமெரிக்கா உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால், தேதி எதையும் குறிப்பிடவில்லை.
15 விநாடிகளுக்கு மிஞ்சாமல், வீடியோக்களைப் பதிவு செய்து, எடிட் செய்து, ஏற்கெனவே இருக்கும் ஒலியுடனோ, புதிய ஒலியுடனோ சேர்த்துப் பகிரும் ரீல்ஸ் வசதியை சோதனை ஓட்டமாக இந்த மாத ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட சீனச் செயலிகள் தடை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அந்த இடத்தை ரீல்ஸை வைத்து நிரப்ப ஃபேஸ்புக் நிறுவனம் முயல்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படவில்லையென்றாலும், அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளது.
இன்னொரு பக்கம் கூகுளின் யூடியூப் தளத்தில் டிக் டாக்குக்குப் போட்டியாக ஷார்ட்ஸ் என்றொரு தளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் கடைசியில் இந்தத் தளம் அறிமுகமாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT