Published : 15 Jul 2020 06:54 PM
Last Updated : 15 Jul 2020 06:54 PM
இன்று காலையில் வாட்ஸ் அப் செயலி செயல்படாமல் போனது. சில மணி நேரங்களுக்குப் பின் இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் செயலியாக இது இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால் வாட்ஸ் அப் உள்ளிட்ட குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோ, ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கான செயலிகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை வாட்ஸ் அப் திடீரென செயல்படாமல் போனது. சிலரால் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில பேரால் செயலிக்குள் நுழைய முடியாமலேயே போனது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் என இரண்டு தளங்களிலுமே இந்தப் பிரச்சினை சில மணி நேரங்கள் நீடித்தது. இந்தியா மட்டுமல்லாது, இலங்கை, பெரு, லண்டன், எகிப்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டனர்.
இதில் பலர் உடனடியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுகுறித்துப் பகிர்ந்து புகாரளிக்கத் தொடங்கினர். ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேகும் ட்ரெண்ட் ஆனது. தொடர்ந்து வாட்ஸ் அப் செயல்படாதது குறித்த மீம்களும் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டன. அடுத்த சில மணி நேரங்களில் வாட்ஸ் அப் மீண்டும் முழுவீச்சில் இயங்க ஆரம்பித்ததும் புகார் அலைகளும், நையாண்டிகளும் ஓய ஆரம்பித்தன.
வாட்ஸ் அப்பில் பிரச்சினை நேர்வது இது முதல் முறை அல்ல. இம்முறை, அதிகப் பயன்பாட்டால் இது நடந்திருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஃபேஸ்புக் தரப்பிலிருந்து அறிக்கையோ, விளக்கமோ தரப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT