Published : 06 Jun 2020 07:35 PM
Last Updated : 06 Jun 2020 07:35 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வீடியோவ காப்புரிமை விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டது. இது சட்ட விரோதமானதல்ல என்று ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டார்ஸி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இனவாதம் காரணமாக காவல்துறையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டொனால்ட் ட்ரம்ப், ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். ஆனால், காப்புரிமை மீறப்பட்டதால் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இதுகுறித்து ட்ரம்ப், "அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எனது பிரச்சார வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. தீவிர இடதுசாரிப் பிரிவுக்காக அவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஒரு தலைப்பட்சமான போராக இருக்கப்போகிறது 230 பிரிவு" என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜாக் டார்ஸி, "உண்மையல்ல, சட்டவிரோதமும் அல்ல. அந்த வீடியோவை நீக்கியதற்கான காரணம் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமைச் சட்டத்தின்படி, அதன் உரிமையாளர் புகார் அளித்திருந்தார் என்பதே" என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் காப்புரிமைச் சட்டம் 1998-ன் படி, காப்புரிமை விதிகளை மீற வகைசெய்யும் தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் அதற்கான சேவைகளை உருவாக்குதல், பரப்புதல் என அனைத்துமே குற்றமாகக் கருதப்படும். காப்புரிமை மீறப்படாமல் இருந்தாலும் அதற்கு வழிவகை செய்வதே குற்றம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. ட்ரம்ப் குறிப்பிட்ட 230 பிரிவுச் சட்டம் என்பது, அமெரிக்காவில் சமூக ஊடகத் தளங்களில் பயனர்கள் வெளியிடும் கருத்துகளுக்கு அந்தந்த நிறுவனங்கள் பொறுப்பாகாது என்று காக்கும் சட்டமாகும். இந்தச் சட்டத்தின் சில தளர்வுகளை நீக்குவதாக ஏற்கெனவே ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இப்போது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்குத் தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என்று சொல்லும் ட்ரம்ப்பின் பிரச்சார வீடியோ ஒன்றை ட்விட்டரும், பேஸ்புக்கும் காப்புரிமை மீறல் காரணமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT