Published : 03 Feb 2020 07:00 PM
Last Updated : 03 Feb 2020 07:00 PM
கரோனா வைரஸ் தொற்று குறித்த தவறான தகவல்களைத் தரும் பதிவுகளை ஃபேஸ்புக் தனது வலைதளத்திலிருந்து நீக்கி வருகிறது.
கரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை தரும் என்ற பெயரில் பல்வேறு தவறான விவரங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அந்நிறுவனத்தின் சுகாதாரத்துறை தலைவர், "இன்ஸ்டாகிராமில் ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பகிரப்பட்டும் தவறான தகவல்களை நீக்கி, முடக்கவுள்ளோம். இதுபோன்ற (தவறான) தகவல்களை முடிந்தவரை நீக்கும் முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை நிபுணர்கள் தவறு என்று குறிப்பிடும் பதிவுகள் நீக்கப்படுகின்றன. முக்கியமாக மருத்துவர் உதவியை நாட வேண்டாம் என்று சொல்லும் பதிவுகள் நீக்கப்படுகின்றன.
குவானோன் என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் கரோனாவிலிருந்து தற்காப்பு என்று கூறி, ஒரு மாயாஜால மருந்து என்று பலரிடம் பகிர்ந்துள்ளனர். ஆனால் அது குடிப்பவர்களைக் கொல்லும் ஒரு ஆபத்தான ப்ளீச் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இப்படியான விஷயங்களைத் தடுக்கவே ஃபேஸ்புக் முன்வந்துள்ளது.
அரசியல் பிரச்சாரத்துக்காக தவறான விளம்பரங்களைத் தருவதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்த காலம் உள்ளது. ஆனால் தற்போது தவறான தகவல்களை முடக்க தைரியமான முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் தன்னார்வலர்கள் சிலரும் கரோனா தொடர்பான பதிவுகளை ஆராய்ந்து தகவல் தெரிவிக்கவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT