Published : 31 Jul 2015 03:42 PM
Last Updated : 31 Jul 2015 03:42 PM
நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர்.
உதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அதில் உள்ளவர்களை டேக் செய்யும் வசதியும் இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு சமூக வலைப்பின்னல் சேவையிலும் பரவலாக அறியப்படாத வசதிகளும் அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. இவற்றை எல்லாம் அழகாகத் தொகுத்து இன்போகிராபிக் வடியில் சேல்ஸ்போர்ஸ்.காம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த இன்போகிராபிக்கில் பேஸ்புக், டிவிட்டர் , ஜி-பிளஸ் மற்றும் லிங்க்டுஇன் ஆகிய முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைகளில் மறைந்திருக்கும் அம்சங்கள் வரிசையாக ஒளிப்படக் குறிப்புகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக்கும் , டிவிட்டரும் எனக்கு அத்துபடி என நினைப்பவர்களுக்கே கூட இந்த அம்சங்கள் வியப்பை அளிக்கலாம். தொழில்முறை நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் லிங்க்டுஇன் சேவை பற்றிச் சொல்லவே வேண்டாம். சமூக வலைப்பின்னல் தளங்களில் ஏற்கனவே பயன்படுத்திவரும் அம்சங்களோடு இந்த ரகசிய அம்சங்களையும் தெரிந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.
அவற்றில் சில:
பேஸ்புக்: பேஸ்புக்கில் மெசேஜ் பகுதியில் செய்திகளைப் பார்க்கும்போது அருகே உள்ள அதர் ( பிற) பகுதியை கிளிக் செய்தால் ,பேஸ்புக்கில் உங்களுக்குத் தொடர்பு இல்லாதவர்களிடம் இருந்து பேஸ்புக்கால் அனுப்பிவைக்கப்படும் செய்திகளைப் பார்க்கலாம்.
பேஸ்புக் பதிவுகளின் கீழ் உள்ள பகுதியில் கிளிக் செய்தால் அந்தப் பதிவுக்கான லைக்குகள் மற்றும் பகிர்வுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
அதே போல மேனேஜ் பகுதிக்குச் சென்று பக்கவாட்டில் தோன்றும் அம்சங்களின் வரிசையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
ஜி-பிளஸ்: ஜி-பிளசில் பியூபிள் பகுதிக்குச் சென்று அங்கிருந்து உங்கள் நட்பு வட்டத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
லிங்க்டுஇன்: தொழில் சார்ந்த நட்புகளை உருவாக்கித் தரும் லிங்க்டுஇன் சேவையில் குறிப்பிட்ட ஒரு குழுவில் இணைவதன் மூலம் உங்களுடன் தொடர்பில் இல்லாத ஒரு உறுப்பினருக்கு அந்தக் குழுவில் இருந்து செய்தி அனுப்பலாம்.
அதே போல பயனாளிகள் தங்கள் தொடர்புகளின் பட்டியலையும் செட்டிங்குக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்குச் சமூக வலைப்பின்னல் இன்போகிராபிக்: https://goo.gl/J3KvM5
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT