Published : 30 Jan 2015 04:39 PM
Last Updated : 30 Jan 2015 04:39 PM
இனி சுயப் படங்களை அணியலாம்
சுய படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டதும் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன? இனி சுய படங்களைக் கைகளில் கூட அணிந்து கொள்ளலாம். நெதர்லாந்து நிறுவனம் இப்படி சுய படங்களைக் கைகளில் பச்சை குத்திக்கொள்வது போல் தற்காலிக டாட்டூவாக அணிந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
பிக்காட்டூ எனும் அந்த நிறுவனம் பயனாளிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைக் கைகளில் ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ளக்கூடிய டாட்டூவாக மாற்றித் தருகிறது. 15 டாலர் செலவில் இப்படி ஒரு டஜன் சுய படங்களை டாட்டூவாகத் தருவித்துக்கொள்ளலாம்.
இந்த டாட்டூகள் ஒரு வாரத்துக்கு காலம் அழியாமல் இருக்குமாம். உலக அளவில் ஷிப்பிங் உண்டு என்கிறது பிக்காட்டூ. இதன் இணையதளத்தைப் பார்த்தால் உலகம் முழுவதும் உருவாக்கப்படும் சுய பட டாட்டூக்களைப் பார்த்து ரசிக்கலாம்.
பிக்காட்டூ இணையதளம்: >http://picattoo.com/
லாவாவின் புதிய அறிமுகம்
இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான லாவா சத்தமில்லாமல் குறைந்த விலையில் இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருக் கிறது. ஐரிஸ் போன் வரிசையில் ஐரிஸ் 350 மற்றும் ஐரிஸ் 470 அறிமுகமாகி இருக்கின்றன. பிரபல ஏலத் தளமான ஈபே (EBay) இந்தியா தளம் மூலம் இவை விற்பனைக்கு வந்துள்ளன. 3ஜி வசதி கொண்ட இந்த போன்களின் விலை ரூ.2999 மற்றும் ரூ.4399 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரிஸ் 350 ஆண்ட்ராய்டு கிட்கேட் கொண்டது. இரட்டை சிம் வசதி இருக்கிறது. 512 எம்பி நினைவுத்திறன் கொண்டது. 32.5 ஜிபி வரை நீட்டிக்கலாம். வை-பை, புளூ டூத், மைக்ரோ யுஎஸ்பி வசதியும் இருக்கின்றன. ஐரிஸ் 470 ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன், இரண்டு காமிரா மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. பட்ஜெட் ஸ்மார்ட் போனில் மேலும் போட்டி தீவிரமாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
மவுசுக்குள் கணினி !
தொடுதிரைகளின் காலம் இது. ஸ்மார்ட் போன், டேப்லட் என எல்லாவற்றையும் தொட்டால் திரை மலர்கிறது. எனவே கணினிக்கு அதிக வேலை இல்லை, கணினியில் பயன்படுத்தும் மவுஸுக்கும் அதிக மவுசு இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், போலந்து நிறுவனம் ஒன்று மவுசுக்குள் கணினியைக் கொண்டு வந்து பிசி,மவுஸ் இரண்டுக்கும் புதிய வழி காட்டியுள்ளது.
போலந்து சாப்ட்வேர் வல்லுநர் ஜெம்ஸ்லா ஜெல்ஜிக் ( Przemysław Strzelczyk ) தலைமையிலான குழு மவுஸ் பாக்ஸ் எனும் பெயரில் இந்த டூ இன் ஒன் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனத்தை மவுசாகப் பயன்படுத்தலாம். இதையே கணினியாகவும் பயன்படுத்தலாம்.
அதற்கேற்ப சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் 128 ஜிபி நினைவுத்திறனைக் கொண்டிருக்கிறது. அதோடு வயர்லெஸ் வசதியும் உண்டு. ஒரு மானிடர் இருந்தால் போதும், அதில் கேபிள் மூலம் மவுசை இணைத்துவிட்டால் கணினி ரெடி. மவுஸ் பேட் மூலம் வயர்லெஸ் வழியே சார்ஜ் செய்து கொண்டுவிடலாம்.
கணினிகளைக் கையில் எடுத்துச்செல்வதில் எப்போதுமே சிக்கல் இருந்திருக்கிறது, புதுமையான வடிவமைப்பு மூலம் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறோம் என மவுஸ் பாக்ஸ் குழு சொல்கிறது. எல்லாம் சரி என்ன விலை? எப்போது விற்பனைக்கு வருகிறது? இரண்டுமே இன்னும் முடிவாகவில்லை. முதலில் முன்னோட்ட மாதிரியைத் தயாரித்து விட்டு அதன் பிறகு வெகுஜன உற்பத்தியைத் தொடக்கத் திட்டமிட்டுள்ளது.
மவுசுக்குள் கம்ப்யூட்டர் செயல்பாட்டை மேலும் புரிந்துகொள்ள: >http://mouse-box.com/
கணினியில் வாட்ஸ் அப்
வாட்ஸ் அப், இப்போது தனி நபர் கணினியிலும் செயல்படக்கூடிய வடிவில் அறிமுகமாகியுள்ளது. ஆனால் பி.சிக்கான வாட்ஸ் அப்பில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் இருப்பதைக் கவனித்தாக வேண்டும் எனத் தொழில்நுட்பத் தளங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முதல் விஷயம் பி.சி., ஸ்மார்ட் போன் இரண்டும் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். அத்தோடு பி.சி.யில் வாட்ஸ் அப் பெயரை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை, போன் செயலியில்தான் செய்ய வேண்டும். ஸ்டேட்டஸை மாற்ற முடியாது. சாட் செட்டிங் , பிரைவசியை மாற்றுவது, பதிவுகளை நீக்குவது ஆகிய வசதிகளும் டெஸ்க்டாப்பில் இல்லை.
குழு சேர்ப்பது, திருத்துவது ஆகியவற்றையும் ஸ்மார்ட் போன் செயலியில் இருந்துதான் மேற்கொள்ள முடியும். உறுப்பினரை நீக்குவது அல்லது குழு பெயரை மாற்றுவதற்கும் இதே நிலைதான். அதேபோல டெஸ்க் டாப் வெர்ஷனை ஸ்மார்ட் போன் செயலி மூலமாகப் பெற முடியாது. இணையத்தில் இருந்துதான் பெற முடியும்: இணைய முகவரி >https://web.whatsapp.com/
ஆகாஷ் ஸ்மார்ட் போன்
குறைந்த விலையிலான ஆகாஷ் டேப்லட்டை உருவாக்கிய டேட்ட விண்ட் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.3,000 என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதைவிட முக்கியமான விஷயம் ஒரு வருடத்துக்கு இலவச இணைய இணைப்பு வசதியுடன் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக செல்போன் சேவை நிறுவனங்களுடன் பேசி வருவதாக நிறுவன சி.இ.ஒ சுனிதா சிங் துலி கூறியுள்ளார்.
எங்குப் பார்த்தாலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பது போல் தோன்றினாலும் இந்தியாவில் செல்போன் வாங்க வருபர்களில் 76 சதவீதம் பேர் ரூ.4,000 விலையிலான போன்களையே வாங்குவதாகவும் ,60 சதவீதம் பேர் ரூ.2,000 விலையிலான போன்களை வாங்குவதாகவும் செல்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் இணைய வசதியைப் பயன்படுத்துவதில்லை. இதை மாற்றும் வகையில்தான் ஓராண்டு இலவச இணைய வசதியுடன் ஸ்மார்ட் போனைக் கொண்டு வர இருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
விண்டோஸ் 10 ஸ்மார்ட் போன்
விண்டோஸ் 10 இயங்குதளத்தின் அப்டேட் இலவசமாக இருக்கும் என்பதும், ஸ்மார்ட் போனிலும் அது செயல்படும் என்பதும் ஏற்கெனவே வெளியான தகவல்தான். விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படக்கூடிய லூமியா போனை மைக்ரோசாப்ட் விரைவில் அமல் செய்யலாம் என்பதுதான் புதிய செய்தி. விரைவில் இது சந்தைக்கு வரலாம் என்று விண்டோஸ் செண்ட்ரல் இணையதளம் தெரிவித்துள்ளது. ஆனால் வேறு விவரங்கள் அதிகம் இல்லை.
லூமியா போன்களுக்கு விண்டோஸ் 10 அப்டேட் கிடைக்கும் என்றாலும் எல்லா லூமியா போன்களுக்கும் இது சாத்தியமல்ல எனக் கூறப்படுகிறது. லூமியா 435, லூமியா 735 மற்றும் 930 போன்களில் இது சாத்தியமாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. லூமியா போன்களுக்கு ஏற்றதாக விண்டோஸ் 10 அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் விண்டோஸ் 10 ஸ்மார்ட் போன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT