Published : 30 Dec 2014 06:09 PM
Last Updated : 30 Dec 2014 06:09 PM

இந்தியாவின் கிஃப்ட் சிட்டி

இந்தியாவின் கிஃப்ட் சிட்டி

இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் 2007 ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டத்தை குஜராத் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கு GIFT (Gujarat International Finance Tec-City) சிட்டி என்றும் பெயரிட்டிருந்தது. உலக தரத்திலான உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் கொண்ட இந்த நகரத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க உள்ளன.

358 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த நகரத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாக கிஃப்ட் சிட்டி வளர்ந்து வருகிறது.

விரிவுபடுத்தப்படும் பனாமா கால்வாய்

பனாமா கால்வாய் இந்த ஆண்டோடு நூற்றாண்டுகளை கொண்டாடி முடிக்கிறது. இந்த புகழ் வாய்ந்த பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

2016ல் புதிய பாதை பயன்பாட்டுக்கு வரும். 75 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. நூறு வருடங்களில் கப்பல் போக்குவரத்து பலமடங்கு முன்னேறிவிட்டதால், மிகப்பெரிய கப்பல்களும் சென்று வருவதற்கு ஏற்ப கால்வாய் விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. தற்போது இந்த கால்வாயை கடந்து செல்ல 10 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. புதிய வழி நேரத்தை குறைக்கும், எரிபொருள் செலவு மிச்சமாகும்.

3டி ஸ்கேனர் வி பிட்

மனித உடலை மருத்துவ தேவைகளுக்காக ஸ்கேன் செய்வது தெரியும். இந்த 3டி ஸ்கேனர் என்பது நமது உடல் குறித்து 24 மில்லியன் புள்ளிவிவரங்களை 20 விநாடிகளில் எடுத்து கொடுத்து விடுகிறது.

தற்போது உடற்பயிற்சி தேவைகளுக்காக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விவரங்களை நமது மொபைல் மற்றும் லேப்டாப் மூலம் எடுத்துக் கொள்ளலாம். நமது உடல் அமைப்புக்கு என்ன வகையான உடற்பயிற்சி எடுப்பது, என்ன உணவை எடுத்துக் கொள்வது போன்றவை இந்த டேட்டாக்களில் கிடைத்துவிடும். சிறிய உடை மாற்றும் அறையைபோல உள்ள இந்த ஸ்கேனர் விரைவிலேயே சந்தைக்கு வரலாம்.

கப்பல்கள் பேரணி

நெதர்லாந்தின் ஆம்ஸ்ட்டர்டாம் நகரின் நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரபலம். நகருக்குள் சாலைகளைப்போல நீளும் நீர்வழித்தடங்கள்தான் முக்கிய போக்குவரத்து வழியாகும்.

இதைவிடவும் முக்கியமாக நெதர்லாந்தில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் கப்பல் பேரணிதான். சிறியது பெரியதுமாக பல நூறு கப்பல்களும், படகுகளும் கலந்து கொள்ளும் இந்த பேரணியை பார்க்க உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது. பழைய பாய்மரக் கப்பல்கள் முதல் நவீன போர்க்கப்பல்களும் பங்கேற்கின்றன.

கை கொடுக்கும் கை

மாற்று உடலுறுப்புகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் பல முன்னேற்றங்களை கண்டுவருகின்றனர். இதற்கான சமீபத்திய சாட்சி 3டி பயோமெட்ரிக் கை. செயற்கை இதயம் பொருத்துவதுகூட சாத்தியமாகிவிட்டது, ஆனால் கையை இழந்தவர்களுக்கு அதன் இழப்பை ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. செயற்கை கரங்களை பொருத்தினாலும் அது சுயமாக வேலை செய்யாது. அந்த குறையை போக்கும் விதமாக இருக்கிறது இந்த 3டி பயோ மெட்ரிக் கை.

வழக்கமாக நாம் எந்த வேலை செய்தாலும் அதற்கு ஏற்ப கட்டளையிடுவது நமது மூளைதான். இந்த கட்டளைகளை உணரும் விதமாக இந்த பயோமெட்ரிக் உள்ளது. இதனால் வழக்கமான மனித கை செய்யக்கூடிய வேலைகளை போலவே இந்த செயற்கை கைகளால் செய்ய முடியும்.

யு பயோனிக் என்கிற நிறுவனம் இதற்கான ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த கைகளை பொருத்திக்கொண்டு நாம் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யமுடியும். ஒவ்வொரு விரல்களும் தனித்தனியாகவும் இயங்கும். இந்த முயற்சி வெற்றிபெற்றால் விஞ்ஞானத்தில் மைல்கல்லாகவே இருக்கும் என்கிறது மருத்துவ உலகமும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x