Published : 14 Nov 2014 03:52 PM
Last Updated : 14 Nov 2014 03:52 PM
ஸ்மார்ட் போன்களின் செயல்திறனைக் கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. ஆனால், உலகின் அதிவேகமான ஸ்மார்ட் போன் எது எனும் கேள்விக்குப் பதில் சொல்வதில் இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் வேகமான ஸ்மார்ட் போன்களைப் பட்டியலிட்டுள்ளனர். சும்மாயில்லை, உலகம் முழுவதும் உள்ள 4,500 ஸ்மார்ட் போன்களைப் பல்வேறு செல்போன் நெட்வொர்க்கில் பயன்படுத்திப் பார்த்து இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனர்.
டவுண்லோடு வேகப்படி பார்த்தால் முதல் 10 ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் சாம்சங் காலெக்ஸி நோட் 3 முதலிடத்தில் உள்ளது. இதன் வேகம் 137.8Mbps. அடுத்த இடத்தில் இருப்பது சீனத் தயாரிப்பான ஒன் பிளஸ் ஒன். இதன் வேகம் 137.4Mbps. மூன்றாமிடத்தில் ஐபோன் 6 இருக்கிறது. சாம்சங் காலெக்ஸி எஸ் 4, எஸ் 5 ஆகியவை அடுத்த 2 இடங்களிலும் அதை அடுத்து எல்ஜியின் ஜி3, ஜி 2 ஆகியவையும் உள்ளன. நோக்கியா லூமியா 1520 க்கு எட்டாமிடம்.
பதிவேற்றும் (அப்லோட்) வேகத்தின் படி பார்த்தால் சாம்சங் காலெக்ஸி எஸ்5 முதலிடத்தில் உள்ளது. காலெக்ஸி எஸ் 4 க்கு 2-ம் இடம். எல்ஜி- ஜி2 வுக்கு மூன்றாவது இடம். நோக்கியா லூமியா 1020 க்கு 5-வது இடம். புகைப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் படங்களைப் பகிர்வதும் பேஸ்புக்கில் வீடியோவைப் பதிவேற்றுவதும் பிரபலமாக இருக்கும் நிலையில் அப்லோடு வேகமும் முக்கியம்தான். இந்த ஆய்வை நடத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜுக்கா மேனர் (Jukka Manner) அதிக விலை என்பது அதிக இணைய வேகத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாகக் கூறியுள்ளார்.
ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எலக்டிரிகல் இஞ்சினியரிங் 2013 முதல் நெட்ரேடார் எனும் செயலி மூலம் மொபைல் இணைய வசதியை ஆய்வு செய்து வருகிறது. இதில் நீங்களும் கூட இதில் பங்கேற்கலாம்: >https://www.netradar.org/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT