Published : 17 Jun 2016 12:26 PM
Last Updated : 17 Jun 2016 12:26 PM
தட்டு தொடர்பான சங்கதிகள் மீது நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஜேம்ஸ் ஆபர்கை (james oberg) அறிந்துகொள்வது நல்லது. அவர் பறக்கும் தட்டு பற்றிய அறிவியலுக்கான விளக்கத்தை அளித்துவருகிறார்.
பறக்கும் ஆரம்பத்தில் பிளையிங் சாஸர்ஸ் என்று குறிப்பிடப்பட்டு அதன் பிறகு யு.எப்.ஒ. (அன் ஐடிண்டிபைடு பிளையிங் ஆப்ஜக்ட்ஸ்) எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் பறக்கும் தட்டுகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களின் கற்பனையையும் கருத்தையும் ஈர்த்துவருகின்றன.
இணையத்துக்கு முந்தைய காலத்தில் வெறும் செய்திகளையும், புகைப்பட ஆதாரங்களையும் வைத்துக்கொண்டுதான் பறக்கும் தட்டு பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது. ஆனால் இணைய யுகத்தில் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. யூடியூப் தளத்தில் யு.எப்.ஒ. எனத் தேடிப் பார்த்தால் ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்தியாவின் விமானத்துக்கு அருகே காணப்பட்ட பறக்கும் தட்டு, வானத்தில் பெரிய பறக்கும் தட்டைப் பார்த்தவர் என விதவிதமாகப் பறக்கும் தட்டு வீடியோக்கள் உள்ளன.
பொதுவாக விஞ்ஞான உலகில் இருப்பவர்கள் பறக்கும் தட்டு தொடர்பான விவாதங்களைப் புறங்கையால் ஒதுக்கித்தள்ளிவிடுகின்றனர். ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவின் முன்னாள் ஊழியரான ஜேம்ஸ் ஆபர்க் அப்படிச் செய்வதில்லை. மாறாக அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகளின் பின்னே உள்ள உண்மையைப் புரியவைக்க முயன்றுவருகிறார்.
ஆபர்க் நாஸா பணியிலிருந்து விலகிய பிறகு விண்வெளி ஆய்வு தொடர்பான பத்திரிகையாளரகவும் ஆய்வாளராகவும் செயல்பட்டுவருகிறார். விண்வெளி ஆய்வுத் திட்டங்கள், அவற்றின் அடிப்படை பற்றித் தொடர்ந்து கட்டுரைகளும் எழுதிவருகிறார்.
இவற்றுக்கிடையே பறக்கும் தட்டு தொடர்பான உண்மைகளை விளக்குவதிலும் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இதை அவர் செய்துவரும் விதம்தான் பாராட்டுக்குரியது. பறக்கும் தட்டு தொடர்பான யூடியூப் வீடியோக்களில் பின்னூட்டமாக அவர் தனது கருத்துகளைப் பதிவுசெய்துவருகிறார்.
பறக்கும் தட்டு அபிமானிகள் சுட்டிக்காட்டும் தகவல்களை எல்லாம் சேகரித்து அவற்றை உண்மையான நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்தப் பணியைச் செய்துவருகிறார். இதன் பயனாக அவர், ஒரு சுவாரஸ்யமான முடிவை முன்வைக்கிறார்.
மெதுவாக நகரும் பொருட்கள், குறிப்பிட்ட ஒளிச் சூழல் மற்றும் காற்று மண்டலத்துக்குப் பழகிய மனித உணர்வுகள், பூமிக்குப் பொருத்தமான சூழலில் சரியாகச் செயல்படுகின்றன. ஆனால், பூமியை விட்டு விலகிச்செல்லும்போது நமது உணர்வுகள் குழப்பமாகிவிடுகின்றன என்கிறார் ஆபெர்க். இந்தக் குழப்பமே பறக்கும் தட்டுகளை நம்பவைக்கிறது என்றும் சொல்கிறார்.
யூடியூப்பில் தான் பார்த்த பறக்கும் தட்டு வீடியோக்களை அலசி ஆராய்ந்து அவற்றில் காணப்படும் பொதுத்தன்மைக்கு ஏற்ப மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
நம்பிக்கையும் உண்மையும்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி வானத்தில் திடீரென தோன்றிய ஒரு பொருள் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு அந்தப் பொருள் வெடித்துச் சிதறி நீல நிறப் பிழம்பாகி மறைந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த நிகழ்வு தொடர்பான யூடியூப் வீடியோ பத்து கோடி முறை பார்க்கப்பட்டது.
ஆனால், ராக்கெட் வெளியேற்றிய புகையின் தாக்கத்தால் உண்டானது இது என்று விளக்கம் தருகிறார் ஆபெர்க். பூமியில் இருந்து வானத்தைப் பார்க்கும்போது, அது முழு சூரிய ஒளியில் இருக்க நாம் இருளில் இருப்பதால் வானத்துக்குப் பழக்கப்பட்டாத நம் கண்களுக்கு அது பிழம்பாகக் காட்சி அளித்தாலும் அது ராக்கெட்டிலிருந்து வெளியேறும் புகையின் தோற்றமே என்கிறார் அவர்.
இதே போல நாஸாவின் விண்கலம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட காட்சி நடுவே வெள்ளைத் துகள்கள் மிதந்து நடனமாடுவது போல அமைகின்றன. இது தொடர்பான யூடியூப் வீடியோக்கள், வேற்றுக் கிரக விண்கலங்களிலிருந்து வந்த ஒளி என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆனால் ஆபெர்க் இதற்கும் பொறுமையாக விளக்கம் தருகிறார். பூமியிலிருந்து பார்க்கும் மனநிலையே இதற்கு அடிப்படைக் காரணம் என்கிறார் அவர். பூமியில் நாம் நிலையாக நிற்கிறோம். ஆனால் வெளியில் விண்கலம் 17,500 மைல் வேகத்தில் பயணிக்கிறது. அதைக் கடந்து செல்லும் எந்தப் பொருளையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் மட்டுமே பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு கடந்து செல்லும் பொருட்களில் ஏதேனும் ஒன்று அதன் பார்வையில் சிக்க வேண்டும் என்றால் அது விண்கல காமிராவில் பதிவானால் மட்டுமே சாத்தியம். விண்கலத்திலிருந்து உதிர்ந்த சில பொருட்களே இப்படி அதன் காமிராவில் சிக்கி மிதக்கும் புள்ளிகளாகத் தெரிகின்றன என்கிறார் அவர். இந்தப் புள்ளிகளை அவர் விண்வெளிப் பொடுகுகள் என்கிறார்.
அதே போல, பூமியில் சூரிய ஒளி ஒரு பொருளின் மீது படும்போது அதன் நிழல் வேறு ஒன்றின் மீது படர்கிறது. ஆனால் விண்வெளியில் பயணிக்கும் விண்கலத்தின் நிழல் வேறு எதன் மீதும் விழ வாய்ப்பில்லாத நிலையில், அவப்போது எதிர்படும் விண்வெளிப் பொடுகளால் ஈர்த்துக் கொள்ளப்பட்டு, வெளியேற்றப்படுகிறது. இதைப் பார்த்தும் ஏமாந்து போகின்றனர் என்கிறார்.
இணைய வெளியில் தகவல்களுக்கும் பஞ்சமில்லை. தகவல் பிழைகளுக்கும் குறைவில்லை. இவர்களுக்கு மத்தியில் சென்று கருத்துப் போராட்டம் நடத்துபவராக ஆபெர்க் விளங்குகிறார்.
ஜேம்ஸ் ஆபெர்க் இணைய தளம்: >http://www.jamesoberg.com/
ஆபெர்க் விளக்கம் பற்றிய கட்டுரை: h >ttp://www.atlasobscura.com/articles/how-one-man-has-explained-almost-every-internet-ufo-theory
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT