Published : 24 Aug 2016 06:52 PM
Last Updated : 24 Aug 2016 06:52 PM
இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களையும், பொருட்களையும் தேட வழிசெய்யும் புதுமையான தேடியந்திரம் இது. திகிலானதும் கூட!
தேடியந்திரங்களின் வேலையும், பயன்பாடும் தகவல்களை தேடுவதுதான் என்றே பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான தேடியந்திரங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. தகவல்கள் என்பதை செய்திகள், கட்டுரைகள், விவரங்கள் தவிர இங்கு ஒளிப்படங்கள், இசை கோப்புகள், வீடியோக்கள், பிடிஎப் கோப்புகள் என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், இணையத்தில் தகவல்களை கடந்தும் தேடும் நிலையும், தேவையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன் அடையாளம்தான் ஷோடன் தேடியந்திரம்.
ஷோடன் வழக்கமான தேடியந்திரம் அல்ல; அது முற்றிலும் மாறுபட்டது. கூகுள் மற்றும் அதன் எண்ணற்ற சகாக்கள் போல ஷோடன் தகவல்களை தேடித்தரமல், சாதனங்களை தேடித்தருகிறது. அதாவது இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களை தேடி கண்டுபிடிக்க உதவுகிறது. அதன் காரணமாகவே திகிட்டும் தேடியந்திரமாகவும் இருக்கிறது.
உண்மையில், ஷோடன் உலகின் திகிலான தேடியந்திரம் என்றே வர்ணிக்கப்பட்டுகிறது. அது மட்டுமா, சாதனங்களுக்கான தேடியந்திரம், பொருட்களின் இணையத்துக்கான தேடியந்திரம், வெப்கேமராக்களுக்கான தேடியந்திரம், தாக்காளர்களுக்கான தேடியந்திரம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. இணையத்துக்கான பின் பக்க கதவு என்றும் சொல்லப்படுகிறது.
கூகுளுக்கு கூட இத்தனை அடைமொழிகள் கிடையாது. ஆனால் ஷோடனுக்கு இருக்கின்றது. இந்த அடைமொழிகளே ஷோடனுன் ஆற்றல் மற்றும் வீச்சை உணர்த்த போதுமானவை.
இது வேறு தேடியந்திரம்!
ஷோடன் வழக்கமான தேடியந்திரம் போன்றது அல்ல என்பதால், அதை பயன்படுத்தி பார்ப்பதில் சராசரி இணையவாசிகளுக்கு எந்த ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை தேடுவதில் என்ன பயன் கிடைக்கப்போகிறது என அலட்சியமாக நினைக்கலாம்.
ஆனால், ஷோடனை அலட்சியப்படுத்த முடியாது. முதல் விஷயம், ஷோடனை பயன்படுத்தும் தேவை இல்லாமல் போனாலும், அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதோடு எதிர்காலத்தில் நிச்சயம் ஷோடன் போன்ற தேடியந்திரத்தை பயன்படுத்தும் தேவை வரலாம்.
முதலில் ஷோடனை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என பார்க்கலாம். ஷோடன் இணையதளங்களையோ, அதில் உள்ள தகவல்களையோ பட்டியலிடுவதில்லை. மாறாக அது, இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை பட்டியலிடுகிறது. ஆகவே இணைக்கப்பட்ட சாதனங்களை அதில் தேடலாம். இதன் மூலம் தேடக்கூடிய சாதனங்கள் வெப்கேமிராக்களும், மானிட்டர்களும் மட்டும் அல்ல, போக்குவரத்து அமைப்புகள், அணைகளுக்கான கட்டுப்பாட்டு மையங்கள், பேஸ்மேக்கர் கருவிகள், சுத்திகரிப்பு மையங்கள், சர்க்கரை அளவு மாணிகள் என இந்த பட்டியல் நீள்கிறது. இந்தப் பட்டியல் உங்களுக்கு அச்சம் தரத் தவிறினால், அணு உலைகளின் அமைப்புகளும் இந்த பட்டியலில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்லாம் சாதனங்கள்!
ஐ.ஓ.டி என சுருக்கமாக சொல்லப்படும் இண்டெர்நெட் ஆப் திங்ஸ் என குறிப்பிடப்படும் இணையத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சாதனங்களை இதன் மூலம் தேடலாம். பொது தேடியந்திரங்களின் மூலம் தேடும் தகவல்களை இணையவாசிகள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல, ஷோடன் மூலம் கண்டெடுக்கும் சாதனங்களையும்,பொருட்களையும் விருப்பம் போல பயன்படுத்தலாம். அதாவது, வெப்கேமராக்களை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அறிமுகம் இல்லாதவர்களின் அறையில் எட்டிப்பார்க்கலாம். இது வெறும் அந்தரங்க ஊடுருவலாக தான் அமையும். ஆனால் போக்குவரத்து அமைப்புகளையும், அணைக்கட்டு கட்டுப்பாட்டு மையங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ள முடிந்தால் விபரீதமாகிவிடாது.
இப்படி இணையத்துடன் இணைக்கப்பட்ட பல வகையான அமைப்புகளை தேடுவதற்கான வாய்ப்பு இருப்பது தான், ஷோடனை திகில் தேடியந்திரம் என வர்ணிக்க வைத்திருக்கிறது. சாதனங்களை அனுமதி இல்லாமல் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் விருப்பம் தாக்காளர்கள் என குறிப்பிடப்படும் இணைய விஷமிகளுக்கே ஏற்படும் என்பதால் இது தாக்காளர்களின் தேடியந்திரம் என்றும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இணைக்கப்பட்ட பொருட்களை தேட உதவுவதால்,பொருட்களின் இணையத்திற்கான தேடியந்திரம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட அறிவியல் புனை கதை சங்கதியாக தான் கருதப்பட்டது. ஆனால் ஸ்மார்ட்போன் யுகத்தில் கேட்ஜெட்கள் பெருகி வருவதோடு, பிடன்ஸ் பட்டை, குளிர்சாதனை அமைப்பு என பலவகையான சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்படுவது இயல்பாகி இருக்கிறது. இவைத்தவிர தொழிற்சாலை சார்ந்த பல அமைப்புகளும் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும், தேடித்துழாவி ஷோடன் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.
எப்படித் தேடுவது?
ஷோடனில் தேட வேண்டும் என்றால், அதில் ரவுட்டர் அல்லது சாதனங்களுக்கான பொதுப்பெயரை டைப் செய்தால், இணைக்கப்பட்ட சாதங்களை பட்டியலிடுகிறது. இவைத்தவிர, இணைக்கப்பட்ட சாதனங்களை பொதுவாகவும் தேடலாம். சாதனங்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை இந்த பட்டியலில் பெறலாம்.
எதற்கு இப்படி ஒரு தேடியந்திரம், வில்லங்கமானதாக இருக்கிறதே என நினைக்கலாம். ஷோடன் வில்லங்கமானது அல்ல, இணையத்தில் எண்ணற்ற பொருட்கள் இணைக்கப்பட்டிருப்பது தான் வில்லங்கமானது என்று இதற்கு பதில் அளிக்கிறார் ஜான் மேத்தர்லி. இவர் தான் ஷோடன் தேடியந்திரத்தை உருவாக்கிய பிரம்மா. தனிமனிதராக இப்படி ஒரு தேடியந்திரத்தை அவர் உருவாக்கி இருப்பதே ஒரு சாதனை தான்.
சுவிட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான மேதர்லி 17 வயதில் பள்ளிப் படிப்பை கூட முடிக்காமல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். சான் டியாகோவின் கல்லூரி ஒன்றில் படித்து பட்டம் பெற்றவர் 2009-ம் ஆண்டு ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு ஷோடன் தேடியந்திரத்தை உருவாக்கத் துவங்கினார். இன்று வரை அது ஒரு தனிமனித முயற்சியாகவே தொடர்ந்தாலும் அதன் தாக்கமும், வீச்சும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
விழிப்புணர்வு!
ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, ஷோடனுக்கான மேதர்லியின் நோக்கம் தீங்கில்லாதாகவே இருக்கிறது. அந்த தேடியந்திரத்தை தவறான நோக்கில் பயன்படுத்தலாம் என்றாலும், அதற்கு உதவுவது அல்ல அவரது நோக்கம். அவரது நோக்கம், இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்கள் பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டித்தரும் தேடியந்திரத்தை நடத்துவது தான். அதையே செய்து வருகிறார்.
முதலில் அவர் ஓய்வு நேரத்தில் தான் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கத்துவங்கினார். 100 டாலர் லேப்டாப்பை வைத்துக்கொண்டு, 10,000 முதல் 1,00,0000 தகவல்களை வரை சேகரித்திருத்திருக்கிறார். இப்போது இது இன்னும் அதிகரித்திருக்கிறது. இப்படி தகவல்களை திரட்டியதற்கான நோக்கம், இணைக்கப்பட்ட சாதனங்களின் பின்னே உள்ள இயங்கு தளம் பற்றி அறிவதாக இருந்தது, இந்த தகவல் வலைப்பின்னல் நிறுவனங்களின் ஆய்வுக்கு உதவும் என அவர் நம்பினார். அதற்காகவே ஷோடனை உருவாக்கினார். ஆனால் சாதனங்கள் பற்றிய அனைத்துவிதமான தகவல்களையும் தேடக்கூடியதாக இது உருமாறியது.
ஷோடன் மூலம் சாதனங்கள் பற்றிய தகவல்களை தேடும் போது தொழில்நுட்ப விவரங்கள் கிடைப்பதோடு, அவற்றை அணுகுவதற்கான பின் பக்க கதவும் புலனாகலாம். ரவுட்டர்கள் பற்றியும், வெப்கேமிராக்கள் பற்றியும் தெரிவிக்கப்படும் தகவல்கள் சாமானியர்களுக்கு புரியாத புதிராக இருக்கலாம். ஆனால் இணைய விஷமிகளுக்கு இவை, சாதங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கான ஆயுதமாகவும் அமையலாம். இதனால் தாக்காளர்கள் இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சலாம்.
வருங்கால எச்சரிக்கை!
ஆனால் பிரச்சனை இதுவல்ல. ஏனெனில் ஷோடனை தீய நோக்கத்துடன் பயன்படுத்த முடியாத அளவிக்கு அதில் பல அம்சங்களை மேதர்லி உருவாக்கி இருக்கிறார். முதலில் இந்த தேடியந்திரத்தை அனோமதயமாக பயன்படுத்த முடியாது. கூகுள் போல இது தேடியதுமே லட்சக்கணக்கான பக்கங்களை பட்டியலிடுவதில்லை. மாறாக, முதல் 10 முடிவுகளை மட்டுமே பட்டியலிடுகிறது. அதற்கு மேல் முடிவுகளை பார்க்க வேண்டும் என்றால், உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் தேவை எனில் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே அடையாளம் தெரியாமல் இருக்க விரும்பும் விஷமிகள் பயன்படுத்த வாய்ப்பில்லை என்கிறார் மேதர்லி. வர்த்தக நிறுவனங்கள் பல கட்டணம் செலுத்தியும் இதன் சேவையை பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், உண்மையான பிரச்சினை விஷமிகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பது அல்ல: ரவுட்டர்கள் முதல் பிரிட்ஜ்கள் வரை இணையத்தில் இணைக்கப்பட்ட பல சாதனங்கள் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், தாக்காளர்களுக்கான பின் பக்க கதவு அகல திறந்திருக்கும் நிலையில் இருப்பதை ஷோடன் உணர்த்துகிறது. இணைக்கப்பட்ட சாதனங்களில் பல பாஸ்வேர்டு பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டவற்றில் பல சாதனங்களில் அவை எளிதில் களவாடப்படக்கூடியவையாக இருக்கின்றன. தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல அவற்றின் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பதே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. பல நேரங்களில் மலிவு விலையில் பொருட்களை அளிப்பதற்காக பாதுகாப்பு அம்சங்களில் சமர்சம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. நிறுவனங்கள் செய்யும் தவறு இது என்றால், இணையவாசிகளும் சாதங்களையும் பயன்படுத்தும் போது அவற்றின் பாதுகாப்பு அம்சம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. இணையத்தில் வெப்கேமரா போன்ற சாதனங்களை இணைக்கும்போது, உரிமையாளர் தவிர வேறு யாராலும் அவை அணுக முடியாமல் இருப்பதை பக்காவான பாஸ்வேர்டு பூட்டு போன்றவை மூலம் உறுதி செய்ய வேண்டும். பலரும் இதை செய்வதில்லை. இப்படி செய்யத்தவறுவதன் ஆபத்தையும் உணர்வதில்லை.
தேவை கவனம்!
இதன் விளைவு பற்றி போர்ப்ஸ் பத்திரிகை கட்டுரை ஒன்று திகிலான உதாரணத்தை அளிக்கிறது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கு மார்க் கில்பர்ட் என்பவர், தனது பிறந்த நாளை 2013-ல் கொண்டாடியபோது, இரண்டு வயது மகளின் அறையில் இருந்து கரகரப்பான குரல் வருவது கண்டு திடுக்கிட்டுள்ளார். அறைக்கு சென்று பார்த்தபோது அந்த குழந்தையை கண்காணிக்க வைத்திருந்த மானிட்டர் வெப்கேமராவுக்குள் அத்துமீறி நுழைந்திருந்த மர்ம நபரின் கைவரிசைதான் அது என தெரிந்தது திகைத்துப்போனார். இது ஒரு உதாரணம்தான். உண்மையில், சிக்கலான சாதனங்களை கூட விஷமிகள் இவ்வாறு அணுகும் அபாயம் இருக்கிறது. இந்த விழிப்புணர்வைதான் ஷோடன் தேடியந்திரம் ஏற்படுத்திகொண்டிருக்கிறது.
நாளுக்கு நாள் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஷோடானின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் சாதனங்களின் பாதுகாப்பு சார்ந்த சரியான முடிவு எடுக்கவும் உதவி வருகிறது.
தேடியந்திர முகவரி>>https://www.shodan.io
- சைபர்சிம்மன்,தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 25 - வியத்தகு வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT