Last Updated : 25 Sep, 2013 01:04 PM

 

Published : 25 Sep 2013 01:04 PM
Last Updated : 25 Sep 2013 01:04 PM

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை செல்போனில் அறியலாம்

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய கட்டணங்களைப் பின்பற்றுவதில்லை என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். செல்போன்களின் மூலமாகவே கட்டணத்தை அறியும் புதிய வசதியை சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆட்டோ கட்டணம் தொடர்பாக, மக்களுக்கு உதவும் வகையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்று ஆட்டோ கட்டணங்களை செல்போன்களில் தெரிந்து கொள்ளும் வசதியை அறிவித்து உள்ளது. "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனம் வடிவமைத்துள்ள "சென்னை ஆட்டோ கட்டணம்" (chennai autofare) என்ற ஆண்ட்ராய்ட் செயலியில் (ஆப்ஸ்) புறப்படும் இடத்தையும் போய்ச் சேரும் இடத்தையும் டைப் செய்தால் போதும். பயணத்துக்கான கட்டணத்தை எளிதில் தெரிந்துகொள்ளலாம். இதனை ஒரு வாரத்தில் 2300 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

புகார் வசதி

மேலும் இந்த செயலியில் புகார் எண்ணும் சேர்க்கப்பட உள்ளது. கட்டணங்களைப் பற்றியோ அல்லது பயணத்தின்போது வேறெந்த இடையூறு ஏற்பட்டாலோ இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதைப் பற்றி போக்குவரத்து இணை ஆணையரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனர் கே.எஸ். சுதாகர் தெரிவித்தார்.

இந்தச் செயலி சென்னையின் போக்குவரத்து நெரிசல்களையும் அதனால் ஏற்படும் தாமதத்தையும் கணக்கில் கொள்ளும் சாமார்த்தியமான செயலி. இது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசிமேடு செல்வதற்கு ரூ.225.40-ல் இருந்து ரூ.235 வரை ஆகக்கூடும் என்று காட்டும். ஆட்டோ மீட்டர் இந்த விலை எல்லையில் எவ்வளவு காட்டினாலும் அது சரி என்று தெரிந்துக்கொள்ளலாம். இதில் சராசரி காத்திருப்பு கட்டணத்தையும் அறியலாம்.

பயணி எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் பயணித்துள்ளார் என்ற தகவலை ஆட்டோ மீட்டரின் படத்துடன் செயலியே துல்லியமாக பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து வருகின்றனர். இது செயல்பாட்டிற்கு வந்தால் கட்டணத்தையும் துல்லியமாக கணிக்க முடியும். எந்த புகார் எழுந்தாலும் அதனை சுமுகமாக தீர்த்துவிட முடியும்.

அடையாறிலிருந்து கலாக்ஷேத்ரா சாலைக்கு செல்லும் சங்கரி ராஜ்குமார், "புதிய கட்டண அட்டையை வைத்திருந்தால் கூட நான் எவ்வளவு கிலோ மீட்டர் பயணித்திருக்கிறேன் என்பதை அறிய முடியாது. இந்த செயலியில் அந்த தகவலும் கிடைப்பதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்றார்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 48 சதவீதம் பேர் பெண்கள். இதுதவிர, bookmycallauto.com என்னும் மற்றொரு ஆண்ட்ராய்ட் செயலியல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனில் இருந்தே ஆட்டோக்களை நாம் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து கொள்ளலாம். செல்போனின் நவீனம் மக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்பது மிகையாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x