Published : 11 Jun 2016 04:55 PM
Last Updated : 11 Jun 2016 04:55 PM
பொதுவாக நம்மில் பலருக்கும் இணையத்தைப் பற்றி என்னென்னெ தெரியும்?
உலகத்தில் எதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் "கூகுளில்" கேட்கத் தெரியும், அன்றாட நிகழ்வுகளை அறிய செய்தித் தளங்களை நாட தெரியும், சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கில் உலவத் தெரியும், பொழுதுபோக்குக்கு யூடியூப் வீடியோக்களை பார்க்கத் தெரியும்... இதற்கு மேல் நாம் அதிகம் பயன்படுத்துவது டாரென்ட், ஜி-மெயில் போன்றவையே. ஆனால் இவை மட்டுமா இணையம்?
சமூக மாற்றத்துக்கு வித்திடக்கூடிய ஜனநாயகத் தன்மை கொண்டது இணையம். பல கோடி மக்களை எந்த ஒரு பாகுபாடுமின்றி இணைக்கும் மாபெரும் சக்தி கொண்டது இணையம். மக்களின் முன்னேற்றத்தில் ஆணிவேறாக இருப்பது இணையம். இவ்வாறு இமயபலம் கொண்ட இணையத்தைப் பற்றி தமிழ் அறிந்த மக்களுக்குச் சுட்டிக்காட்டுவதையே தன் தலையாய கடமையாகக் கொண்டுள்ளார் தொழில்நுட்பம் சார்ந்த எழுத்தாளர் சைபர்சிம்மன்.
தமிழ் எழுத்துலகின் கவனிக்கத்தக்க படைப்புகளான 'இணையத்தால் இணைவோம்', 'நெட்'சத்திரங்கள் போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...
"20 வருடங்களாக பத்திரிகை துறையில் நேரடியாக இயங்கினேன். சுதேசிமித்திரன், முதலீடு, இந்தியா டுடே (தமிழ்), மாலைச்சுடர் என முழுநேரப் பத்திரிகையாளராக வலம் வந்தேன். 90-களில் லேசாக இணையம் தலைதூக்க ஆரம்பித்தது. அப்போது 'இன்டர்நெட் கார்னர்' என்ற தலைப்பில் இணையத்தை பற்றி தினமொரு பத்தி எழுதினேன். நாளடைவில் இன்டர்நெட்டின் வீரியமும் பயன்பாடும் பெருகியது. நானும் இணையத்தை பற்றி மட்டுமே எழுத ஆரம்பித்தேன். இப்போது மானுட கலாச்சாரமாக உருவெடுத்துள்ள இன்டர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற ஆக்கபூர்வமான பார்வையில் பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதி வருகிறேன்" என்று சொல்லும் இவர், தற்போது ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், தொழில்நுட்ப எழுத்தாளருமாக தீவிரமாக இயங்கி வருகிறார்.
சிலிக்கான் வேலி பற்றிய சுவாரஸ்யங்கள், ஸ்டார்ட் அப் கலாச்சாரம், நவீனத் தொழில்நுட்பம், இன்டர்நெட்டின் விஸ்வரூபம், சமூக ஊடகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்களை உடனுக்குடன் தமிழில் பதிவு செய்கிறார். மேலும் 'புதிய தலைமுறை - கல்வி'யில் "நம் காலத்து நாயகர்கள்" என்ற தலைப்பிலும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களில் இணையம் சார்ந்த பத்திகளை எழுதி வருகிறார்.
'தி இந்து' வலைதளத்தில், இணைய உலகின் முக்கிய தேடியந்திர தளங்களை அறிமுகப்படுத்தி விவரிக்கும் >ஆ'வலை' வீசுவோம் என்ற தொடரையும், 'தி இந்து' இணைப்பிதழ்களில் ஒன்றான 'இளமை புதுமை'யில் 'இளமை டாட் நெட்' பகுதியிலும் தொடர்ச்சியாக சைபர்சிம்மன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார் இரா.நரசிம்மன்.
"கல்லூரியில் கணிதம் படித்த எனக்கு, கணக்கை விட இலக்கியத்திலும் சமூகத்திலும்தான் அதிக ஆர்வம் இருந்தது. படிப்பு முடிந்த பிறகு மூன்று வருடங்களாக புத்தகத்தில் மூழ்கி இருந்தேன். நூலகத்திலேயே என் நேரத்தை செலவழித்தேன். அப்போது எனக்கு பரிச்சயமான எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும்தான் என் தேடலுக்கு வழிகாட்டினார்கள்" என்கிறார்.
ஃபேஸ்புக்கை தவிர்த்து நம்முள் எத்தனை பேருக்கு sellaband.com, moveon.org, librarything.com, icheckmovies.com போன்ற வலைதளங்களை தெரியும்? இப்படி நமக்கே தெரியாதப் பயன்படக் கூடிய 12 தலைப்புகளில் 110 இணையதளங்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய புத்தகத்தை 2014-ல் "இணையத்தால் இணைவோம்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
2015-ல் வெளியிட்ட 'நெட்'சத்திரங்கள் என்னும் தன் இரண்டாவது நூலில் இணையம் மூலம் புகழ்பெற்றவர்கள் மற்றும் புதுமைகண்டவர்களின் வியக்கவைக்கும் வெற்றிக்கதைகளை எழுதியுள்ளார். இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமாக்கி இருக்கிறது என்பதை இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிக்கின்றன. உள்ளூர் சாம் ஆண்டர்சன் தொடங்கி வெளிநாட்டு அலெக்ஸ் டியு வரை பல வைரல் பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு இது!
இன்றைய இந்தியாவில் இணையத்தின் நிலை குறித்து கேட்டதற்கு, "சர்வதேச அளவில் எந்த அளவுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறார்களோ, அதற்கு நிகரான அளவுக்கு இந்தியாவிலும் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது. நெட் நியுட்டிராலிட்டி போன்ற விஷயங்களில் நாம் இன்னும் கவனம் செலுத்தாமலே இருக்கிறோம். இந்தியா போன்ற தொழில்நுட்பம் பெருகிய நாட்டில் நமக்கான தேடியந்திரம் (சர்ச் இஞ்சின் தளம்) கூட இல்லாததுதான் தர்மசங்கடமான விஷயம். இன்னமும் கூகுளைத் தான் தட்டுகிறோம்.
மேலும், இந்தியாவின் தேவைகள் அறிந்து நம் மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படக் கூடிய ஆப்ஸ், இணையதளங்கள் என பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரிக்க வேண்டும். நம் ஊரிலேயே எல்லா வளங்களும் உள்ளது, இனியும் அயலவர்களிடம் கை ஏந்தாமல் நம்மால் ஆன கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்" என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார் சைபர்சிம்மன்.
"இன்டெர்நெட்டில் காணக்கூடிய புதிய போக்குகள், சுவையான தகவல்கள், தளங்கள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். இன்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இன்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என சுட்டிக்காட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்."
இப்படியான அறிமுகக் குறிப்புகளைக் கொண்டுள்ள இவரது அதிகாரபூர்வ வலைதளமான >http://cybersimman.com-ல் ஏறத்தாழ 2,000 கட்டுரைகள் உள்ளன. இணையத்தைப் புதிதாக பயன்படுத்துவோர் மட்டுமின்றி, இணையத்தில் தினமும் அதிக நேரம் உலவும் தமிழ் நெட்டிசன்களின் விக்கிப்பீடியோவாகவே திகழும் பயனுள்ள தளம் இது.
| எழுத்தாளர் சைபர்சிம்மனின் நூல்கள்:'இணையத்தால் இணைவோம்', 'நெட்'சத்திரங்கள் - வெளியீடு: மதி நிலையம் |
முந்தைய அத்தியாயம்:>புது எழுத்து | விநாயக முருகன் - ஐ.டி. களத்தில் இருந்து ஒரு துடிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT