Last Updated : 17 Feb, 2017 10:10 AM

 

Published : 17 Feb 2017 10:10 AM
Last Updated : 17 Feb 2017 10:10 AM

இளமை .நெட்: விஞ்ஞானிகள் @ ட்விட்டர்..!

முதலில் சின்னதாக ஒரு சவால். வாழும் விஞ்ஞானிகளில் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? நன்றாக யோசித்துப் பார்த்தும், ஒருவர் பெயர்கூட உங்கள் நினைவுக்கு வரவில்லை எனில் உங்களை நீங்களே நொந்துகொள்ள வேண்டாம். ஏனெனில், உலகில் பெரும்பாலானோர் இப்படிச் சமகால விஞ்ஞானிகளை அறியாதவர்களாகத்தான் இருக்கின்றனர்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், வாழும் விஞ்ஞானி ஒருவரை நினைவுபடுத்திக்கூற 70 சதவீதம் பேரால் முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இது கொஞ்சம் வருத்தம் தரும் விஷயம்தான்.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்திருக்கும் காலத்தில், அறிவியலுக்காக என்றே தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள சமகால விஞ்ஞானிகள் குறித்து நாம் அதிகம் அறியாமல் இருப்பது கவலை அளிப்பதுதான்.

பாப் நட்சத்திரங்களையும் திரையுலகப் பிரமுகர்களையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் நாம், சமகால விஞ்ஞானிகள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஏன்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள், அதிக அளவு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை என நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

உண்மையில், விஞ்ஞானிகள் பலவிதங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர். மற்ற பிரபலங்கள் போல அவர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் ‘ட்விட்டர் விஞ்ஞானிகள்’ என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பல விஞ்ஞானிகள் ட்விட்டர் மூலம் தங்கள் ஆய்வுகள் குறித்துச் சுவாரசியமான தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டுவருகின்றனர்.

அண்மையில் இந்த விஞ்ஞானிகள் இன்னும் ஒரு படி இறங்கி வந்து, தங்களைத் தாங்களே ட்விட்டரில் அறிமுகம் செய்துகொண்டு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றிருக்கின்றனர். இதற்காக‌ ஹாஷ்டேக்கை உருவாக்கிப் பயன்படுத்திவருகின்ற‌னர். உண்மையில் வாழும் விஞ்ஞானிகள் என பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்ட

‘# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’ (#actuallivingscientist) என்பதுதான் அந்த ஹாஷ்டேக்!

ட்விட்டரில் செயல்பட்டுவரும் விஞ்ஞானிகள் பலரும், இந்த ஹாஷ்டேக்குடன் குறும்பதிவை வெளியிட்டுத் தங்களை அறிமுகம் செய்துகொண்டுள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானியான டேவிட் ஸ்டீன்தான் முதலில் இதைத் தொடங்கி வைத்தார். வனவிலங்குப் பன்மைய‌ விஞ்ஞானியான ஸ்டீன் தனது ட்விட்டர் பக்கத்தில் (@AlongsideWild), “பெரும்பாலான அமெரிக்கர்களால் வாழும் விஞ்ஞானிகளின் பெயர்களைச் சொல்ல முடியவில்லை (இது உண்மைதான்). எனவே அவர்கள் நாம் செய்வதன் முழு அருமையை உணராமல் இருப்பதில் வியப்பில்லை” எனக் கூறி, ‘நான்தான் டேவ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்டீன் ட்விட்டர் பக்கம் தவிர தனி வலைப்பதிவு மூலமும் தனது ஆய்வு பணிகள் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொண்டுவருகிறார்: >https://davidasteen.com/

ஸ்டீனின் இந்தக் குறும்பதிவை பார்த்த சக விஞ்ஞானி மேர் ராப்யர் என்பவர், அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் இரு குறும்பதிவை வெளியிட்டார். “சரிதான் டேவி. விஞ்ஞானிகள், ஒரு ஒளிப் படத்துடன் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாக இது இருக்கும்” எனும் வகையில் அவரது குறும்பதிவு அமைந்திருந்தது. இந்தக் குறும்பதிவுடன் ‘# ஆக்சுவல் லிவிங் சயிண்டிஸ்ட்’ எனும் ஹாஷ்டேகையும் இடம்பெறச் செய்திருந்தார்.

விஞ்ஞானிகள், மக்கள் முன் நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்வோமே என்பது போல அந்தக் குறும்பதிவு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ட்விட்டரில் செயல்பட்டுவரும் விஞ்ஞானிகள், தங்கள் தாங்களே அறிமுகம் செய்து கொள்ளத் தொட‌ங்கினர். மறக்காமல் இந்த ஹாஷ்டேகையும் சேர்த்துக்கொண்டனர். இந்த ஹாஷ்டேக் உயிர்ப்புடன் இருப்பதும், அதன் மூலம் அறிமுகமாகும் விஞ்ஞானிகளின் தொடர் வரிசையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.

ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் இந்தக் குறும்பதிவு அலையால் உற்சாகம் அடைந்து, இவற்றைத் தங்கள் பக்கங்களில் மறு குறும்பதிவிட்டும் வருகின்றனர். பெண் விஞ்ஞானிகள், ‘வுமன் இன் சயின்ஸ்’, ‘ட்ரெஸ் லைக் எ வுமன்’ போன்ற துணை ஹாஷ்டேக்குகளையும் சேர்த்துப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மாதிரிக்குச் சில குறும்பதிவுகளைக் காணலாம்:

# நான். டிஎன் லீ. நகர்ப்புறக் காரணிகளுக்கு மத்தியில் சிறிய பாலூட்டிகளின் பழக்கங்கள் மற்றும் வரலாற்றை ஆய்வு செய்கிறேன்: @DNLee5

# நான் ஜேன் ஜேக். மனிதர்கள் அதிகம் உள்ள சூழலில் அழியும் நிலையில் உள்ள கழுகுகள் எப்படி வாழ்கின்றன என ஆய்வு செய்கிறேன்: @janetngbio

# நான் ரச்சேல். தேனீக்கள் தொடர்பாக ஆய்வு செய்கிறேன்: @RachaelEBee

# நான் மெசிடஸ், இனப்பெருக்க அமைப்புக் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்: @DrCedes

இப்படித் தொடர்ச்சியாக விஞ்ஞானிகள், வாழும் விஞ்ஞானிகள் ஹாஷ்டேக்கை அடையாளப்படுத்தித் தாங்கள் செய்துகொண்டிருக்கும் பணி தொடர்பானத் தகவல்களைக் குறும்பதிவுகளாக வெளியிட்டுள்ளனர். இந்த ஹாஷ்டேக்கின் கீழ், வந்து கைகுலுக்கும் விஞ்ஞானிகளையும், அவர்கள் ஆய்வின் பரப்பையும் பார்த்தால் வியப்பாகவே இருக்கிறது. அவர்கள் ஆய்வுச் சூழல் மாறுபட்டிருப்பதை ஒளிப்படங்கள் அழகாக உணர்த்துகின்றன.

இந்த விஞ்ஞானிகளின் குறும்பதிவுகளைப் படித்துப் பார்த்தால் அவர்கள் ஈடுபட்டுள்ள ஆய்வுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கும் அறிவியலில் ஆர்வம் இருந்தால் இந்த ஹாஷ்டேக்கைப் பற்றிக்கொண்டு சுவாரசியமான பல விஞ்ஞானிகளை ட்விட்டரில் பின்தொடரலாம். சமூக ஊடக யுகத்தில் மக்களுடன் ஆய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதே சரியாக இருக்கும் என விஞ்ஞானிகள் புரிந்துகொண்டிருக்கின்றனர். இப்போது நாம்தான் பதிலுக்கு அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

அதாவது அவர்களை ட்விட்டர் பக்கங்களைப் பின்தொடர்ந்து ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்ள வேண்டும். சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டு உரையாடினால் இன்னும்கூட சந்தோஷப்படுவார்கள்.குறிப்பாக, படிக்கும் பிள்ளைகள் இருந்தால் இந்த ட்விட்டர் பக்கங்களையும் படிக்கச் சொல்லி அறிமுகம் செய்யலாம். அறிவியல் மீது ஆர்வத்தை வளர்க்க இது நிச்சயம் உதவும்.

ட்விட்டரில் விஞ்ஞானிகளைப் பின் தொடர்வதில் ஆர்வம் உள்ளவர்களின் வசதிக்காக ‘சயின்ஸ்’ இதழ், ட்விட்டர் நட்சத்திரங்களாக விளங்கும் விஞ்ஞானிகள் பட்டியலையும் வெளி யிட்டுள்ளது: >http://www.sciencemag.org/news/2014/09/top-50-science-stars-twitter

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x