Last Updated : 25 Oct, 2013 10:03 PM

 

Published : 25 Oct 2013 10:03 PM
Last Updated : 25 Oct 2013 10:03 PM

மனித வளம்: மைக்ரோசாஃப்டை முந்தியது அமேசான்!

வருவாய் மற்றும் லாபத்தில் எப்படியோ தெரியாது. ஆனால், ஊழியர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை மைக்ரோசாஃபட் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் முந்தியிருக்கிறது.

முன்னோடி இ-காமரஸ் நிறுவனமான அமேசான் தனது மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இந்த நிதி நிலை முடிவுகளில் ஒளிந்திருக்கும் முக்கிய மைல் கல்லை, தி நெக்ஸ்ட்வெப் தொழில்நுட்ப செய்திதளம் கண்டுபிடித்து சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டிலை தலைமயிடமாக கொண்ட அமேசான் நிறுவனத்தில் சர்வதேச அளவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 1,09,800 ஆக உயர்ந்திருப்பதே அந்த மைல்கல். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் அமேசான் ஊழியர் படை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்திருப்பது மட்டும் அல்ல, கடந்த மூன்று மாதங்களில் 12,800 பேரை வேலைக்கு சேர்த்திருப்பதுதான்.

இதன் மூலம் மைக்ரோசாப்டின் ஊழியர்கள் எண்ணிக்கையை அமேசான் முந்தியிருக்கிறது. மைக்ரோசாப்டில் 1,00,518 பேர் பணியாற்றுவதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது.

மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய இரண்டு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் ஊழியர் தேவை மாறுபட்டவை என்றாலும் எண்ணிக்கை அளவில் அமேசான் முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது, கவனிக்கத்தக்கது. அது மட்டும் அல்ல, அந்நிறுவனம் சமீப காலங்களில் புதிதாக ஊழியர்களை நியமிப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக புரிந்து கொள்ளலாம்.

அமேசன்.காம் இணையதளத்தில் 270 பக்கத்துக்கும் மேல் வேலை வாய்ப்பு பட்டியல் நீண்டிருக்கிறது.அதற்காக அமேசானில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என்று நினைத்து விடுவதற்கில்லை. அமேசானில் ஒரு பிரிவில் வேலைக்கு சேர 8 மணி நேரம் நேர்காணலை எதிர் கொண்ட ஊழியர்கள் எல்லாம் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அமேசான் தனது வர்த்தகம் மற்றும் கவனத்தை தீவிரமாக்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x