Published : 19 Mar 2014 09:28 PM
Last Updated : 19 Mar 2014 09:28 PM

கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்கள் மோடி, ஜெயலலிதா

கூகுள் தேடல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வர்கள் பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளனர்.

உலகில் பெரும்பாலான இணைய பயனாளிகள் உபயோகப்படுத்தும் தேடல் தளம் கூகுள். எந்த விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றாலும், இணையத்தில் பலரும் கூகுளையே நாடுகின்றனர். கூகுள் நிறுவனம், அவ்வபோது தமது தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் இப்போது இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ள முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

மோடியைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், இந்தப் பட்டியலில் சிவராஜ் சிங் சவுகான் (மத்தியப் பிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), தருண் கோகாய் (அஸ்ஸாம்), உமர் அப்துல்லா (ஜம்மு-காஷ்மீர்) மற்றும் உம்மன் சாண்டி (கேரளா) இருப்பதாக கூகுள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலவரம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதியிலிருந்து மார்ச் 13-ஆம் தேதி வரை கணக்கிடப்பட்டதாகும்.

"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்களைப் பற்றி அலசப்படுகிறது. அவர்களால் அவர்களது கட்சிக்கு எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்பதும் கணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் தேடல் நிலவரத்தில் இந்த முதல்வர்களின் நிலை இணையத்தில் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கவே இந்த கணக்கு எடுக்கப்பட்டுள்ளது" என கூகுள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, தருண் கோகாய், உம்மன் சாண்டி, புபிந்தர் சிங் ஹூடா (ஹரியானா), வீர்பத்ர சிங் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் ஹரிஷ் ராவத் (உத்திராஞ்சல்) ஆகியோர் அதிகம் தேடப்பட்ட முதல்வர்களாக முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

பா.ஜ.க.வில் மோடியைத் தொடர்ந்து வசுந்தரா ராஜே, ஷிவ்ராஜ் சிங் சவுகான், மனோகர் பரிகர் (கோவா) மற்றும் ராமன் சிங் (சத்திஸ்கர்) ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x