Last Updated : 10 Oct, 2014 06:41 PM

 

Published : 10 Oct 2014 06:41 PM
Last Updated : 10 Oct 2014 06:41 PM

பெண்கள் சம்பள உயர்வு கேட்க கூடாது- சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றார் மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ.

பெண்கள் சம்பள உயர்வு கேட்க கூடாது என்று கூறிய தனது கருத்தை மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாகி சத்ய நாதெள்ளா திரும்ப பெற்றார்.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பேற்றவர் சத்ய நாதெள்ளா. அவர் வியாழக்கிழமை அன்று 'கணினியியலில் பெண்கள்' (Conference of Women in Computing) என்ற கருத்தரங்கில் பங்கேற்றபோது, "பெண்கள் தற்போது உலகம் எங்கும் பல துறைகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் மிக முக்கியமாக தொழில்நுட்பத் துறையில் சாதனை செய்து வருகின்றனர். பணியை செய்யும் பெண்கள் சம்பள உயர்வு குறித்து பேசக்கூடாது. அவர்களுக்கு தங்களது வேலையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். சம்பள உயர்வு கேட்காமலிருப்பது ‘நல்வினை” என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

அவர்களுக்கான வெகுமதி வந்து சேரும் என்பதை அவர்கள் நம்ப வேண்டும். பணியை சிறப்பாக செய்து முடிக்கும் பெண்கள், தங்களது நிறுவனம் கொண்டிருக்கும் விதிகளின்படி அதற்கான வெகுமதியை அளிக்கும்" என்றார்.

உலக அளவில் புகழ் பெற்ற ஒரு நிறுவன தலைமை அதிகாரியின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்திய அவரது பேச்சு மைக்ரோசாஃப்ட் நிறுவன பெண் ஊழியர்களை அதிச்சியடைய செய்தன.

தலைமை பொறுப்பில் இருக்கும் பெண் நிர்வாகிகளும் அவரது பேச்சுக்கு தங்களது கடும் கண்டனைத்தை தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் சத்ய நாதெள்ளாவின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் பதிவாகின.

மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவன கிளைகளில் பெண்களை பணி நீக்கம் செய்ய கூடியதற்கான எச்சரிக்கையாகவும் நாதெள்ளாவின் பேச்சு இருக்கலாம் என்ற கருத்தும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பரவின.

இது போன்ற மிகப் பெரிய சர்ச்சைகளை தொடர்ந்து தனது கருத்து முற்றிலும் தவறானது என்று சத்ய நாதெள்ளா உடனடியாக விளக்கம் தெரிவித்தார். இது தொடர்பாக வியாழக்கிழமை அன்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, " பெண்கள் சம்பள உயர்வு குறித்து பேசக்கூடாது என்று நான் கூறிய கருத்து தவறானது.

ஆனால் நான் குறிப்பிட முயன்றது, நிறுவனங்களில் ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு இருக்கக்கூடாது என்பது தான், அதாவது சம்பள உயர்வு பாலின வேறுபாடின் அனுகூலங்களினால் இருக்கக் கூடாது என்றுதான் கூறினேன்” என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது நிறுவன ஊழியர்களுக்கும் இது குறித்த விளக்க கடிதத்தையும் அவர் அனுப்பி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x