Last Updated : 06 Jan, 2017 11:22 AM

 

Published : 06 Jan 2017 11:22 AM
Last Updated : 06 Jan 2017 11:22 AM

2017: கலக்கப்போகும் தொழில்நுட்பங்கள்!

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்கக்கூடிய சாதனங்களை மூக்குக் கண்ணாடி போல அணிந்திருப்போம். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவைச் செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்... இவையெல்லாம் என்னவென்று வியக்கிறீர்களா? 2017 - ம் ஆண்டில், தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுநர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டுபவை இவை. தொழில்நுட்ப உலகின் மாற்றங்களும், முன்னேற்றங்களும் நாம் நினைப்பதையும், புரிந்துகொள்வதையும்விட வேகமாக உருவாகிவரும் நிலையில், இந்த ஆண்டு கவனத்தை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பப் போக்குகள் பற்றிப் பார்ப்போம்:

அசத்தும் அணிகணினிகள்

‘வியரபில்ஸ்’ எனப்படும் அணிகணிணிகள் ஏற்கனவே வெகுஜனப் பழக்கத்துக்கு வர ஆரம்பித்துவிட்டன. கூகுள் கிளாஸ் தோல்வி கொஞ்சம் பின்னடைவாக அமைந்தாலும், ‘ஸ்னேப்சேட்டின் ஸ்பெக்டகல்ஸ்’ புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பேஷனுடன் இணைந்து, பாதுகாப்பையும், நவீனத் தகவல் தொடர்பு வசதிகளையும் அளிக்கும் நவீன காதணிகளையும் கழுத்துச் சங்கிலிகளையும் பார்க்க முடிகிறது. இந்த வகை அணிகணினிகள் மேலும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளன.

ட்ரோன்கள், மேலும் ட்ரோன்கள்

ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா விமானங்கள் அல்லது தானியங்கி விமானங்கள் தொழில்நுட்பப் பித்தர்களுக்கான நவீன விளையாட்டுச் சாதனங்கள் என்ற நிலையில் இருந்து முன்னேறி வந்துவிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்கில் பலவித ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்தன. மேலும் பேரிடர் மீட்புப் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ட்ரோன்களின் பங்களிப்பு அதிகரித்துவருகிறது. மின் வணிக நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியில் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்த ஆண்டு ட்ரோன்களின் பயன்பாடு மேலும் பல துறைகளில் நுழையலாம். கூடவே ட்ரோன்களின் தொல்லையும் அதிகரிக்கலாம்.

மெய்நிகர் மாயம்

பேஸ்புக் ஒரு நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்துகிறது என்றால் எதிர்காலத்தில் அந்த நுட்பம் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வரப்போகிறது என உணர்ந்துகொள்ளலாம். அந்த வகையில், ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பேஸ்புக் தான் கையகப்படுத்திய ‘ஆக்குலஸ் ரிப்ட்’ நிறுவனத்தின் மூலம் இது தொடர்பான ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ளது. சாம்சங், எச்.டி.சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பிரிவில் தீவிரமாக உள்ளன. மூக்குக் கண்ணாடி போல மெய்நிகர் சாதனத்தை மாட்டிக்கொண்டு முற்றிலும் புதிய அனுபவத்தில் திளைத்திருக்கும் சூழல் உருவாகலாம். வீடியோ கேம் முதல் உளவியல் சிகிச்சை வரை இந்த மெய்நிகர் மாயம் ஆதிக்கம் செலுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்கள் தயாரா?

இன்னொரு யதார்த்தம்!

கடந்த ஆண்டு உலகத்தை ஆட்டிப்படைத்த ‘போக்கேமான் கோ’ விளையாட்டு நினைவிருக்கிறதா? இது வெறும் ஸ்மார்ட் போன் விளையாட்டு அல்ல; நிஜ உலகையும், இணைய உலகையும் இணைக்கும் ஒரு புதிய வகை விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு ‘கலப்பு ஆக்மெண்டெட் ரியாலிட்டி’ அதாவது மேம்பட்ட யதார்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. நிஜ வாழ்க்கைப் பொருட்கள் மீது தொழில்நுட்பத்தை இணைத்து அவற்றை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சி இது. கல்வித் துறை உட்பட பல துறைகளில் இதன் பயன்பாட்டைக் காணும் நிலை வரலாம்!

செயற்கை நுண்ணறிவு

‘ஏ.ஐ’ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு வெகு வேகமாக முன்னேறிவருகிறது. இதன் செயல்பாடு பல துறைகளில் இன்னமும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும், வங்கித் துறை உள்ளிட்ட சில துறைகளில் புதிய சேவை வடிவில் இதனுடன் கைகுலுக்கும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போது, பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் ஆர்வம்காட்டிவருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுமே அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த நுட்பத்தை அதிகம் நம்பியுள்ளன. அதனால், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செய்திகளையும் முன்னேற்றங்களையும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கலாம். இதேபோல, பாட்கள் எனப்படும், தானியங்கி புரோகிராம்களின் வளர்ச்சியும் தீவிரமடையும் எனச் சொல்கின்றனர். அரட்டைக்கு உதவுவது முதல், சேவைகளுக்கு வழிகாட்டுவது வரை பலவித பாட்கள் உருவாக்கப்பட உள்ளன. ‘எனக்கொரு பாட் வேண்டுமடா’ எனப் பாடும் அளவுக்குத் தனிநபர் உதவியாளர் பாட்களும் பெருகலாம்.

புத்திசாலி செயலிகள்

இப்போது விதவிதமான செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இனி வரப்போகும் செயலிகள் இப்போதுள்ள செயலிகளைவிடப் புத்திசாலித்தனம் மிக்கதாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக, மின்னஞ்சல் சார்ந்த ஒரு செயலி என்றால், உங்கள் சார்பாக முக்கியமான மின்னஞ்சல்களைக் கண்டறிந்து ‘இவற்றை மட்டும் படியுங்கள் பாஸ் போதும்’ எனப் பரிந்துரைக்கும் செயலிகள் அதிகரிக்கலாம். திட்டமிடல், பயணம், வர்த்தகம், திரைப்பட நுகர்வு என எல்லாவற்றிலும் புத்திசாலித்தனமான செயலிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவற்றின் அடிநாதமும் செயற்கை நுண்ணறிவுதான்!

எதிர்கால கார்கள்

ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் போல கார்களும் ஸ்மார்ட்டாகிவருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகும். ஏற்கெனவே தானியங்கி கார்கள் ‘எல்-போர்டு’ மாட்டிக்கொண்டு சோதனை முறையில் சாலைகளில் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. இதன் நீட்சியாக கார்கள் இன்னும் ஸ்மார்ட்டாக மாறக்கூடும். கார் வெறும் காராக இல்லாமல் தொழில்நுட்பக் கூடமாக மாறிவிடும். தானியங்கி கார்கள் மட்டும் அல்ல தானியங்கி ‘டிரக்’, பஸ்களும் பவனிவரத் தொடங்கியுள்ளன. இணைய ‘கால் டாக்சி’ நிறுவனமான ‘உபெர்’ நிறுவனமும் இதில் ஆர்வம்காட்டிவருகிறது.

சைபர் தாக்குதல் உஷார்

‘ஹேக்கர்ஸ்’ எனப்படும் தாக்காளர்களின் கைவரிசை இந்த ஆண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு, இணைக்கப்பட்ட பொருட்கள் அதிகரிப்பது தாக்காளர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துவிடுகிறது. பாஸ்வேர்ட்களைக் கொத்துக் கொத்தாகக் களவாடிச்செல்வதும், போன்களையும் கணினிகளையும் லாக் செய்து வைத்து மிரட்டுவதும், ‘பிஷிங்’ (Phising) வகை மோசடிகளும் அதிகரித்துவருகின்றன. இவை தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதால் என்கிரிப்ஷன் பாதுகாப்பு குறித்தெல்லாம் இணையச் சாமானியர்களும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. தனியுரிமை பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பிக்டேட்டா பற்றிப் பெரிதாகப் பேசப்படும் நிலையில், நிறுவனங்கள் கையில் நம் டேட்டா எப்படி எல்லாம் பயன்படுகின்றன என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பேட்டரி ஆற்றல்

ஸ்மார்ட் போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் அவற்றுக்குத் தீனி போடும் பேட்டரிகளின் ஆற்றலை அதிகரிக்கும் தேவையும் அதிகமாக உணரப்படுகிறது. அதற்கேற்ப பேட்டரி தொடர்பான ஆய்வுகளும் தீவிரமடைந்துள்ளன. மேலும் புதுமையான பேட்டரி நுட்பங்களை எதிர்பார்க்கலாம்! அதே போல புதிய வகை ஸ்மார்ட் போன் மாதிரிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம்.

இயர்போன் புதிது

காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போன்கள் ‘வயர்லெஸ்’ நுட்பத்தில் புதிய அவதாரம் எடுத்துவருகின்றன. ஆப்பிளின் ‘ஏர்பாட்’ உள்ளிட்ட பல புதுமை சாதனங்கள் கவர்ந்திழுக்கின்றன. மேலும் புதுமையான இயர்போன்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

பிளாக்செயின் நுட்பம்

தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்ற துறைகளைவிட நிதித் துறையில் அதிகம் நிகழ்வதை அண்மைக் காலத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த வகை நிறுவனங்கள் நிதி நுட்ப நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த வகை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிவருகின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான கவனம் அதிகமாகியுள்ளதால் நிதி நுட்ப நிறுவனங்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளன. இந்தப் பிரிவில் முக்கியமாகப் பேசப்படும் பிளாக்செயின் (Blockchain) நுட்பம் வங்கிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. பிரபல மறை பணமான பிட்காயினுக்கு (Bitcoin) அடிப்படையாக விளங்கும் இந்த நுட்பம் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான அடித்தளமாகவும் கருதப்படுகிறது.

பொருட்களின் இணையம்

‘இண்டெர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும் பொருட்களின் இணையம் தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு இன்னும் தீவிரமாகியுள்ளது. இணைய வசதி கொண்ட பொருட்களின் எண்ணிக்கையும், பயன்பாடும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. இத்துறையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருவதால், புதுமையான சேவைகள் அறிமுகமாகும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x