Published : 10 Sep 2014 03:35 PM
Last Updated : 10 Sep 2014 03:35 PM
ஐஃபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐஃபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஃபோன் 6 மற்றும் ஐஃபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐஃபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது.
இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐஃபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.
காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
16 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐஃபோன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐஃபோன் 6 ப்ளஸின் விலை 299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐஃபோன் ப்ளஸ் விலை 499 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் எப்போது?
அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்திலோ, நவம்பர் மாதத்திலோ ஐஃபோன் 6 இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 ஜிபி ஐஃபோன் 5 எஸ் மாடல், இந்தியாவில் ரூ.41,500-க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேசும்போது, "புதிய ஐஃபோன்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாங்கள் தயாரித்ததில் இதுதான் சிறந்த மாடல்" என்றார்.
ஐஃபோன் 6 திரையின் நீளம் 4.7 இன்ச், ஐஃபோன் 6 ப்ளஸ் திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐஃபோன் மாடலான 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐஃபோன் மாடலான 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.
8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட ஐஃபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.
ஆப்பிள் பே!
இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.
இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று குக் தெரிவித்தார்.
ஆப்பிள் வாட்ச்
ஆப்பிள் வாட்ச்சில், செயலிகள் பயன்படுத்தவும், பயனர்கள் சொல்வதை எழுத்தாக பதிவு செய்துகொள்ளவும், ஐபோனுடன் இணைந்து செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் இருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் வாட்ச், பயனர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு இன்னும் எத்தனை தூரம் போன்ற விவரங்களையும் தருகிறது.
அடுத்த வருட துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இதன் விலை 349 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐஃபோன் 5, 5 சி, 5 எஸ், 6, 6 ப்ளஸ் ஆகிய மாடல்களோடு இணைந்து வேலை செய்யும். ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள் 6.9 சதவீத விற்பனையும் செய்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT