Published : 31 Aug 2014 02:54 PM
Last Updated : 31 Aug 2014 02:54 PM
நாம் இணையமயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறோம். இதன் மையமாக ஸ்மார்ட் போன்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன.
இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. அதென்ன ஸ்மார்ட் போன் கவலை என்று கேட்கிறீர்களா? எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை.
இழப்பு என்றால் விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல; அதைவிட போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். இதைத் தான் ஸ்மார்ட் போன் தொலைவதால் ஏற்படும் கவலை (smartphone-loss anxiety disorder) என்கின்றனர்.
கனடாவின் ஆண்டாரியோவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தி, ஸ்மார்ட் போன் தொலைய வாய்ப்பில்லை என்னும் மிதப்பில் இருப்பவர்கள் இந்தக் கவலையால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதிப்புகளை மீறி ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் போன் தொலைந்தால் அதில் உள்ள தகவல்களைப் பாதுக்காக்கத் தேவையான வழிகள் பற்றி அறியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். போனில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்து வைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தகவல்கள் மறைந்து போகச்செய்யும் டைம்பாம் வழி, தொலைவில் இருந்து லாக் செய்வது என இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
உங்கள் ஸ்மார்ட் போன் தொலையாமலே இருக்கட்டும். ஆனால், அதில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளை அறிந்து வைத்திருங்கள் தவறில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT