Published : 31 Oct 2025 12:16 AM
Last Updated : 31 Oct 2025 12:16 AM
சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் விரைவாக ஓடி அதன் பின்னரே மேலே எழும்பும். அதேபோல, வானில் இருந்து தரையிறங்கும்போதும் ஓடுதளத்தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்னரே குறிப்பிட்ட இடத்தை வந்தடையும். இந்த நிலையில், விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை (Vertical Take-off & Landing - VTOL) சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த 20, 30 ஆண்டுகளாக ஹைபிரிட் ராக்கெட் மோட்டார்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவற்றின் உந்துவிசைத் திறன்கள் பல்வேறு பயன்பாடுகளுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன. ஹைபிரிட் ராக்கெட் உந்துவிசையைப் பயன்படுத்தி, விமானத்தை செங்குத்தாக உயரே செலுத்தவும், மென்மையாக தரையிறக்கவும் முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஹைப்ரிட் ராக்கெட் உந்து விசைகளைப் பயன்படுத்துவது புதுமையான அம்சம்.
இதற்கு நீண்ட ஓடுபாதைகள் தேவைப்படாது. ஓடுபாதைகள், பெரிய விமான நிலையங்களை அமைக்க இயலாத கரடுமுரடான நிலப்பரப்புகளில் இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயன்படும். பல்வேறு இடங்களுக்கு விமானப் போக்குவரத்தை பரவலாக்கவும் உதவிகரமாக இருக்கும். வணிகப் பயன்பாடு மட்டுமின்றி, மக்களுக்கான விமான சேவை, ராணுவ விமானப் போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர். உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்விதழில் (Journal of Aeronautical and Space Sciences) அவர்களது ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT