Last Updated : 15 Oct, 2025 05:04 PM

 

Published : 15 Oct 2025 05:04 PM
Last Updated : 15 Oct 2025 05:04 PM

ஏவுகணை நாயகர் கலாம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ) பணியாற்றும் வாய்ப்பு அப்துல் கலாமுக்குக் கிடைத்தது. இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ‘ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்ட’த்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் பொறுப்பேற்றார். இந்தத் திட்டத்தின்கீழ் ‘அக்னி’, ‘பிரித்வி’ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.

இஸ்ரோவில் பணியாற்றியபோது உள்நாட்டு ஏவூர்திகளின் தயாரிப்புக்காக இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகளை அவர் ஒருங்கிணைத்திருந்தார். இந்தியப் பாதுகாப்புக்கான பணியை ஏற்றபோது இது அவருக்கு உதவியாக இருந்தது. பல்வேறு நிறுவனங்களை ஒருங்கிணைத்து உள்நாட்டிலேயே பேரிடர்காலத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தக் காரணமாக இருந்தார்.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு குழுக்களைக் கலாம் உருவாக்கினார். நிறுவனப் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஐந்து ஏவுகணைத் தொகுதியின் மிகப் பெரிய ஏவுகணையான ‘அக்னி’யை 1989இல் வெற்றிகரமாக ஏவிய பிறகு ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனக் கொண்டாடப்பட்டார். ‘அக்னி’யின் வெற்றி, இந்தியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அரசுக்கும் மக்களுக்கும் அளித்தது.

திட்ட இயக்குநர்கள் பலரால் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும்படி அப்துல் கலாம் வலியுறுத்தினார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் பல்வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது.

எஸ்.எல்.வி 3 திட்டத்தின்போதே அவரது மனதில் குடிகொண்டுவிட்ட இந்தக் கருத்தைச் செயல்படுத்துவதற்குத் ‘தகவல் தொழில்நுப்ட முன்கணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கழகம்’ உதவியாக இருந்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, திட எரிபொருள் திட்டத் தந்தை எனப் போற்றப்படும் வசந்த் கோவாரிகர் ஆகிய இருவரின் ஒத்துழைப்போடு இந்தக் கழகம் உருவாக்கப்பட்டது.

பொதுவாகப் பலரும் பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதில் டி.ஆர்.டி.ஓ.வின் தலைமைப் பொறுப்பேற்றார் கலாம். மத்திய அணு ஆற்றல் துறையுடன் இணைந்து பொக்ரான் - 2 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக முடித்தார். ராணுவப் பாதுகாப்பில் தற்சார்பு நடவடிக்கைகளை வலியுறுத்தினார். இலகுரக போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் துணைநின்றார்.

| அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள் |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x