Published : 01 Sep 2025 09:20 AM
Last Updated : 01 Sep 2025 09:20 AM
சென்னை: தமிழ்நாடு கணினி அவசரநிலை குழு மூலம், சந்தேகத்துக்குரிய 80 ஆயிரம் ஐபி முகவரிகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சொத்துகள், சேவைகளை பாதுகாக்கும் நோக்குடன் முதல் இணைய பாதுகாப்புக் கொள்கை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நடைமுறைகளை சேர்க்கவும், புதிய டிஜிட்டல் அச்சுற்றுதல்களை எதிர்கொள்ளவும் இணைய பாதுகாப்புக் கொள்கை 2.0 கடந்த 2024-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை திறம்பட செயல்படுத்தும் விதமாக, தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல்சேவைகள் துறை மூலம் தமிழ்நாடு கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (கணினி அவசரநிலை பதில் அளிப்பு குழு) உருவாக்கப்பட்டது.
எல்காட் நிறுவனம்: இணைய பாதுகாப்புக்கான உள்கட்டமைப்புக்காக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம் இந்த குழுவை உருவாக்கியது. தன்னாட்சி அமைப்பான இது அனைத்து அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 500-க்கும் மேற்பட்ட அரசு இணையதளங்கள் கையாளப்பட்டு வருகின்றன. அதேபோல, 1,200 தகவல் தொழில்நுட்ப சொத்துகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சைபர் பாதுகாப்பு குறித்த 130 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 3,200 அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
அதில், 36 தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள், 103 தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் அரசுத் துறைகளில் நியமனமும் செய்யப்பட்டுள்ளனர். இத்துடன், தமிழகத்தில் சந்தேகத்துக்குரிய 80,039 ஐபி முகவரிகள் (IP address - இணைய இணைப்பு பெற்றுள்ள சாதனங்களுக்கான பிரத்யேக அடையாள எண்) கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT