Published : 30 Jun 2025 06:49 AM
Last Updated : 30 Jun 2025 06:49 AM
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு செய்ய வேண்டும். போலியான தகவல், வெறுப்புப் பேச்சு, வார்த்தை வன்முறை எனப் பல விஷயங்கள் இத்தளத்தில் பகிரப்படுகின்றன. தெரிந்தோ தெரியாமலோ நாமும் அதற்குப் பங்காற்றாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வெறுமனே ஒரு ‘லைக், ஷேர், கமெண்ட்’டால் என்ன ஆகிவிடப் போகிறது என இருந்துவிடக் கூடாது.
எந்தவொரு கருத்து, ஒளிப்படம், காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவிடுவதாக இருந்தாலும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இப்பதிவால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா, தனிமனித ரகசியத்தை, ஒருவருடைய ‘தனிப்பட்ட அந்தரங்க’ விஷயங்களைப் பொதுவெளியில் பகிரப் போகிறோமா, இதனால் யாருடைய மனமாவது புண்படுமா என்பதைக் கேள்விக்குள்ளாக்கி, விடை கிடைத்த பின் பதிவிடுவது நல்லது.
உங்களுடைய சொந்த கருத்தாக இல்லாமல் வேறொருவரின் பதிவைப் பகிரும் முன்பு, அச்செய்தி உண்மையானதா என்பதை ஒன்றுக்கு இரு முறை சரிப்பார்க்க வேண்டும். போலியான செய்திகளால் சமூகத்தில் பல குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. எனவே, எந்தவொரு செய்தியைப் பகிரும் முன்பும் அது போலியா, இல்லையா என்பதைக் கட்டாயமாக உறுதிப்படுத்திய பிறகு பகிர்வது நல்லது.
நேர மேலாண்மை: சமூக ஊடகங்களைச் சிலர் ‘டிஜிட்டல் டைரி’ போலப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்ன சாப்பிடப் போகிறோம், எங்கு, எப்படி ஓர் இடத்துக்குச் சென்றோம் என எல்லாவற்றையும் அனுபவப் பகிர்வாகப் பதிவிடுகின்றனர். இதில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியான அனுபவங்களை, நினைவுகளை மட்டுமே சமூக ஊடகத்தில் பகிர்கின்றனர். இப்படி இன்னொருவரின் வாழ்க்கையைப் பார்த்து தனது வாழ்க்கையோடு ஒப்பிடுவதால், வேறு சிலருக்கு மனஅழுத்தம் ஏற்படக்கூடும். இளைய தலைமுறை முதல் பெரியோர்வரை எந்த வயதைச் சேர்ந்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூக ஊடகப் பதிவுகளை வைத்து மட்டும் ஒருவர் இப்படிதான், அப்படிதான் என முன்முடிவு செய்யாமலும், நண்பர்களின் கட்டாயப்படுத்துதலால் பதிவுகளை உருவாக்காமல் இருக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களிலும் பயனுள்ள பல செய்திகள், அறிவை செம்மைப்படுத்தும் பதிவுகள், மனதை ஆசுவாசப்படுத்தும் நேர்மறையான கருத்துகள், நிகழ்வுகள் பகிரப்படுகின்றன.
அவற்றைத் தேடிச் சென்று படிப்பது, பார்ப்பது என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தில் அடங்கிவிடுகிறது. சமூக ஊடகத்தளத்தில் பாராட்டுகள் அல்லது விமர்சனங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். அதை முதிர்ச்சியான மனநிலையுடன் அணுகத் தயாராகிக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவோர் ‘சோஷியல் மீடியா டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டோடு இருக்க முயற்சி செய்யலாம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சமூகப் பொறுப்புணர்வையும் நேர மேலாண்மையையும் பின்பற்றுவது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நல்லது.
ஜூன் 30 - சமூக ஊடக நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT