Published : 30 Jun 2025 06:40 AM
Last Updated : 30 Jun 2025 06:40 AM
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. சமூக வலை தளங்கள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திய காலம் மாறி, அதற்குள் சிக்கிக்கொண்ட மனநிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற குறும் வீடியோக்களில் இன்றைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடு வதால் கல்வி, வேலை, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
உலகம் முழுவதும் மாணவர்கள் சுமார் 1-2 மணி நேரத்தில் 300-400 ரீல்ஸ்கள் பார்ப்பதாகவும், சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு,
2 மணி நேரத்துக்கு மேலாகச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற வீடியோக்கள் டோபமைன் (Dopamine) என்கிற ஹார்மோனைச் சுரந்து நமக்குத் தற்காலிக இன்பத்தைத் தருவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், சமூக வலைதளங்கள் ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் மகிழ்ச்சியாகத் தோன்றும் இன்ஃப்ளு யன்சர்களுடன் தங்கள் வாழ்க்கையைப் பலரும் ஒப்பிடுவதால் மனப்பதற்றம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்ற நிலைமைகளுக்குத் தள்ளி விடுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
விடுபட என்ன வழி? - சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன், பயன்பாட்டு நோக்கத்தைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்குக் கற்றல், தொழில் வளர்ச்சி, புதிய யோசனை களைப் பகிர்தல் அல்லது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவையாக அது இருக்கலாம்.
சமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் நிலையிலிருந்து விடுபட, முதலில் எந்தவிதப் பலனையும் அளிக்காத சமூக வலைதளச் செயலிகளைத் திறன்பேசியிலிருந்து நீக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் திரை நேரத்தை (Screen Time) கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சமூக வலைதளங்களில் செலவிட விரும்புகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். 30 நிமிடங்கள் அல்லது 1 மணி நேரம் போன்ற குறிப்பிட்ட நேர வரம்பை அமைத்து, அதைக் கடைப்பிடிக்க, Screen Time அல்லது Digital Well being போன்ற டூல்களைப் பயன்படுத்துங்கள்.
அடுத்தது, சமூக வலைதளங்களில் கல்வி, தொழில்நுட்பம், கலை, விளையாட்டு என உங்கள் ஆர்வத்திற்குத் தகுந்த ஆரோக்கியமான தகவல்களைத் தரும் தனிநபர்களையோ குழுக்களையோ பின்பற்றலாம். ஆன்லைனில் மட்டுமே செலவிடு வதைத் தவிர்த்து உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம். இதனால் மனநலம் மேம்படும். இறுதியாக, சமூக வலைதளப் பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா அல்லது எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என அவ்வப்போது மதிப்பீடு செய்யலாம்.
ஜூன் 30 - சமூக ஊடக நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT